கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்:ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை- பெண்களுக்கும் கட்டுப்பாடு!
காபூல்: தாலிபான்கள் மெல்ல மெல்ல தங்களது கோரமுகத்தை காட்ட தொடங்கிவிட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டவர் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தடை விதித்துள்ளனர். அத்துடன் இதுவரை பணிகளுக்கு சென்ற பெண்கள் இனி வீடுகளில்தான் இருக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்கள் கொடுங்கோலாட்சி நடத்தினர். பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் முழுமையாக உடலை மூடி ஆண்கள் துணையுடனேயே வெளியே வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாமியான் புத்தர் சிலையை வெடிகுண்டுகளால் தகர்த்தனர் தாலிபான்கள். மனித உரிமைகள் கிஞ்சித்தும் மதிக்கப்படாத ஆட்சியை நடத்தியதுடன் அல்கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களின் புகலிடமாகவும் ஆப்கானிஸ்தானை உருமாற்றி வைத்தனர் தாலிபான்கள். இப்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் பிடியில் சிக்கிவிட்டது.

வெளிநாடுகளுக்கு தப்பும் ஆப்கானியர்கள்
இதனால் தாலிபான்களின் ஆட்சியில் வாழவே முடியாத என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு தப்பி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் நேட்டோ படை உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியவர்கள் பெரும்பாலானோர் ஆப்கானை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். காபூல் தாங்கள் வசமானதும் சர்வதேச செய்தியாளர்களை சந்தித்தார் தாலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித்.

உரிமைகள் தருவோம் என மழுப்பல்
அப்போது, ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது பணிகளுக்கு திரும்பலாம். வீடு வீடாக சோதனைகள் நடத்தப்படமாட்டாது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அடைக்கலம் தரமாட்டோம் என பல வாக்குறுதிகளை அள்ளிவிட்டார் சுஹைல் ஷகீன். இப்போது நிலைமை தலைகீழாக மாறி தாலிபான்கள் தங்களது கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டனர். காபூலில் நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் ஜபியுல்லா முஜாஹித்.

பெண்களுக்கு கட்டுப்பாடு
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதற்கான கெடு ஆகஸ்ட் 31 என விதிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு தப்புவதற்காக காபூல் விமான நிலையம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஆனால் நேட்டோ உள்ளிட்ட படைகளுடன் பணியாற்றியவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர். ஆப்கானிஸ்தானில் இதுவரை பணிக்கு சென்று வந்த பெண்கள் இனி வீடுகளில்தான் இருக்க வேண்டும். பெண்கள், வேலைக்கு செல்வது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை வழங்கும் வரை இந்த நிலைமை நீடிக்கும் என கூறியுள்ளார் ஜபியுல்லா முஜாஹித்.

தாலிபான்மயமாக்க எதிர்ப்பு
ஏற்கனவே ஆப்கானிஸ்தானை தாலிபான் மயமாக்குவதை ஏற்க முடியாது என பஞ்ச்சீர் மாகாணத்தில் போராளிக் குழுக்கள் எச்சரித்துள்ளனர். பஞ்ச்சீர் போராளிகளை சரணட்டைய வேண்டும் என தாலிபான்கள் கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் யுத்தத்துக்கு தயார்; பல ஆயிரம் போராளிகள் தயார் எனவும் பஞ்ச்சீர் போராளிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை மெல்ல மெல்ல தாலிபான்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications