ஹிஜாப் அணிந்த பெண்ணை தடுத்த ஊழியர்.. இந்திய ரெஸ்டாரண்ட்டுக்கு பூட்டு.. பக்ரைன் அரசு நடவடிக்கை!
மனமா: பக்ரைன் நாட்டில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண்ணுக்கு அனுமதி மறுத்த ரெஸ்டாரண்ட்டுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
பக்ரைன் தலைநகர் மனமாவின் அட்லியா பகுதியில் இந்திய உணவகமான லான்டன்ஸ் ரெஸ்டாரண்ட் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஹிஜாப் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
இந்நிலையில் ரெஸ்டாரண்ட்டுக்கு முஸ்லிம் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்தார். அப்போது ரெஸ்டாரண்ட் சார்பில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தன்னை அனுமதிக்கும்படி கேட்டு கொண்டார். ஆனால் ரெஸ்டாரண்ட் நிர்வாகம் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

ரெஸ்டாரண்ட்டுக்கு பூட்டு
இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரயைடுத்து ரெஸ்டாரண்ட்டுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். சுற்றுலா நிறுவனங்கள் தொடர்பான 1986ம் ஆண்டுக்கான ஆணைச் சட்டம் 15ன் படி ரெஸ்டாரண்ட் மூடப்பட்டுள்ளதாக பக்ரைன் நாட்டின் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் கூறியுள்ளது.

விசாரணை துவக்கம்
இதுகுறித்து அந்த ஆணையம் விசாரணையை துவக்கி உள்ளது. மேலும் அந்த ஆணையம் கூறுகையில், ‛‛நாட்டின் சட்டம், கொள்கைகளை மீறும் உணவகங்களை அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக மக்களுக்கு எதிராகவும், தேசத்தின் பெயரிலும் பாகுபாடு காட்டும் செயல்களையும் நாங்கள் முற்றிலும் விரும்புவது இல்லை'' என கூறியுள்ளது.

புரிந்து கொள்ளவில்லை
இதுதொடர்பாக ரெஸ்டாரண்ட் சார்பில் இன்ஸ்டகிராம் பக்கத்தில், ‛‛பெண்ணை அனுமதிக்காத மேலாளரை பணி இடைநீக்கம் செய்துள்ளோம். இருப்பினும் நாங்கள் யார் என்பதை புரிந்து கொள்ளவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக பக்ரைனில் நாங்கள் சேவை செய்து வருகிறோம். இது அனைவருக்கும் தெரியும்'' என கூறியுள்ளது.

உணவு சாப்பிட அழைப்பு
முன்னதாக வரும் மார்ச் 29ல் பக்ரைன் மக்களை நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக உணவு சாப்பிட ரெஸ்டாரண்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்ரைனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications