இஸ்ரேலை விடுங்க.. சத்தமே இல்லாமல் வடகொரியாவை வைத்து ரஷ்யா போடும் பிளான்! உக்ரைனில் பதற்றம்
கீவ்: மத்திய கிழக்கில் ஒரு பக்கம் மோதல் தொடரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையேயான சண்டையும் மீண்டும் உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவுக்காக உக்ரைன் நாட்டில் சண்டையிட ஆயுதங்கள் மட்டுமின்றி வீரர்களையும் வடகொரியா அனுப்புகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக உள்ளது.
இப்போது உலகமே மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் குறித்துத் தான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் இடையே மோதல் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ரஷ்யா உக்ரைன் மோதலில் இப்போது திடீர் திருப்பம் நடந்துள்ளது. வடகொரிய வீரர்கள் ரஷ்யாவில் குவிந்துள்ள நிலையில், அது அங்குப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மோதல்: ரஷ்யா உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வந்த சூழலில், கடந்த 2022 முழு வீச்சிலான மோதலாக வெடித்தது. இதில் தொடக்கத்தில் ரஷ்யாவின் கைகள் ஓங்கி இருந்தாலும், அதன் பிறகு உக்ரைன் கம்பேக் கொடுத்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் தொடர்கிறது. இந்த போரால் இரு தரப்பிற்கும் இழப்பு தொடரும் நிலையில், இதை முடிவுக்குக் கொண்டு வர நாடுகள் முயன்று வருகின்றன. இருப்பினும், அதற்குப் பெரிய பலன் கிடைக்கவில்லை.
உக்ரைன் அதிபர்: இந்த போரில் ரஷ்யாவுக்காக உக்ரைன் நாட்டில் போரிட வடகொரியா தனது வீரர்களை அனுப்புவதாகப் புகார் எழுந்து இருந்தது. கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக இந்த புகாரை முன்வைத்தார். ரஷ்யாவுக்கு இத்தனை காலம் ஆயுதங்களை வழங்கி வந்த வடகொரியா, இப்போது தனது வீரர்களை அனுப்புவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், போர் பெரிதாக வெடிக்கும் முன்பு உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.
வடகொரியா: இதற்கிடையே இது தொடர்பான வீடியோ ஒன்றை உக்ரைன் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் வடகொரிய வீரர்களுக்கு ரஷ்யச் சீருடைகள் வழங்கப்படுவது அதில் தெரிய வருகிறது. மேலும், அந்த வீரர்கள் கொரிய மொழியில் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் தெளிவாகக் கேட்கிறது.
வடகொரியாவில் இருந்து வீரர்கள் வந்தவுடன் அவர்கள் தங்கள் ராணுவ உடை அளவை ஒரு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு ராணுவ உடை வழங்கப்படும். அப்படி வடகொரிய வீரர்களுக்கு ராணுவ உடை வழங்கும் வீடியோவையே உக்ரைன் இப்போது வெளியிட்டுள்ளது. மேலும், மற்றொரு வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. ரஷ்ய-சீன எல்லைக்கு அருகில் உள்ள செர்கீவ்கா பயிற்சி மைதானத்திற்கு வடகொரிய வீரர்கள் வருவது அதில் கேட்கிறது.
கூடுதல் வீரர்கள்: இது வெறும் ஆரம்பம் தான் என்றும் இன்னும் இதுபோல பலர் வடகொரியாவில் இருந்து வரவுள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறுகிறது. இப்போது வட கொரியா 1,500 வீரர்களை அனுப்பியுள்ளது. உக்ரைன் போரில் சண்டையிட மொத்தம் 12,000 வீரர்களை அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை தென்கொரியாவும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications