உக்ரைனில் வழிபாட்டு தலங்கள், வரலாற்று புகழ் பெற்ற கட்டிடங்கள் போச்சே.. துடிக்கும் யுனெஸ்கோ
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு வழிபாட்டு தலங்கள், வரலாற்று சின்னங்கள் உள்பட பிரபலமான 53 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறது. ரஷ்யா வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடங்கள், நினைவு சின்னங்கள் மீது குண்டுகள் வீசப்படுவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி ஏராளமான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இன்னும் பலர் வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

போரை நிறுத்த மறுப்பு
உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும். அங்குள்ள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் போரை நிறுத்தும் முடிவை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு போரை நிறுத்துவதில் உடன்பாடில்லை. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்கிறது.

நினைவு சின்னங்கள்
இந்நிலையில் தான் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் மத வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்று பாரம்பரிய கட்டடங்கள், நினைவு சின்னங்கள் என மொத்தம் 53 கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. உக்ரைன் அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் அடிப்படையிலும் செயற்கைகோள் படங்கள் அடிப்படையிலும் இந்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் சேதம் தொடர்பாக இன்னும் ஆராயப்பட்டு வருகிறது. இதனால் இந்த எண்ணிக்கை முழுமையானது அல்ல என யுனெஸ்கோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

16 வரலாற்று கட்டடங்கள்
குறிப்பாக கிழக்கு கார்கீவ் பகுதியில் 12க்கும் அதிகமான தேவாலயங்கள், நவீன பாரம்பரிய தளங்கள் உருக்குலைந்துள்ளது. மேலும் கீவ், செர்னிஹிவ் பகுதியில் தலா 5 வரலாற்று சின்னங்கள் சேதமடைந்துள்ளன என யுனெஸ்கோ கூறியுள்ளது. இதுவரை உக்ரைனில் மொத்தம் 29 மத வழிபாட்டு ஸ்தலங்கள், 16 வரலாற்று கட்டடங்கள், நான்கு அருங்காட்சியகங்கள் மற்றும் நான்கு நினைவுச்சின்னங்கள் சேதமடைந்துள்ளது என யுனெஸ்கோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

135 குற்றங்கள்
இந்த பட்டியலில் சில நாட்களாக அதிக பதற்றம் நிலவிய மரியுபோல், கெர்சன் நகரத்தின் தகவல்கள் இல்லை. உக்ரைனின் கலாச்சார அமைச்சகம் சார்பில் கூறுகையில், ‛‛ போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் கலாசார பாரம்பரியத்துக்கு எதிராக ரஷ்ய படைகள் 135 குற்றங்களை செய்துள்ளன'' என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, ‛‛ரஷ்யாவின் போர் நடவடிக்கையின்போது உக்ரைனில் உள்ள பாரம்பரிய கட்டங்கள், நினைவு சின்னங்கள் மீது கவனம் கொள்ள வேண்டும்'' என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுக்கு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications