73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா!
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக உக்கிரமான ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. 2022 துவங்கிய இந்த போர் 4 வருடங்கள் ஆகியும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா தடை விதித்த பின்பு தாக்குதல்கள் குறைந்து இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெரும் ரஷ்யா பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தங்களின் வரலாற்றிலேயே மிகப்பாரிய அளவிலான வான்வழித் தாக்குதலை தொடுத்துள்ளது. இந்தத் தொடர் குண்டுமழை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ஒட்டுமொத்த உக்ரைன் தேசமே தற்போது நிலைகுலைந்து போயுள்ளது.

24 மணி நேர கொடுர தாக்குதல்
உக்ரைன் நாட்டின் முக்கியப் பாதுகாப்பு அரண்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை முற்றிலும் தரைமட்டமாக்கும் நோக்கில் ரஷ்யா தங்களின் முழு ராணுவ பலத்தையும் தற்போது இறக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைனிய நகரங்களை நோக்கி ரஷ்யாவில் இருந்து சுமார் 73 அதிநவீன ஏவுகணைகளும், 656 ட்ரோன் விமானங்களும் ஏவப்பட்டு மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத வான்வழித் தாக்குதலில் சிக்கி தற்போதைய நிலவரப்படி சுமார் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 130-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.
ரஷ்யா கொடுத்த பதிலடி
ரஷ்யா தற்போது நடத்தியுள்ள இந்த மாபெரும் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு மிக முக்கிய காரணம் உள்ளது. கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் பகுதியில் இயங்கி வந்த ஒரு முக்கிய ட்ரோன் பயிற்சி முகாமைக் (Drone training camp) குறிவைத்து உக்ரைன் ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியிருந்தது.
உக்ரைன் நடத்திய அந்த வான்வழித் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். தங்களின் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட அந்தச் சம்பவத்திற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே தற்போது உக்ரைன் மீது இந்த அதிரடி தாக்குதலைத் தொடுத்துள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உதவி இல்லை
உக்ரைனுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவை ரஷ்யா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது மத்திய கிழக்கு பகுதியில் ஈரானுடனான கடுமையான போரில் அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறது.
ஈரானுடனான போரின் காரணமாக அமெரிக்கா தங்களின் வசம் இருந்த ஏராளமான வான் பாதுகாப்பு அமைப்புகளைப் (Air Defense Systems) பெரும் அளவில் பயன்படுத்தி தீர்த்துவிட்டது. இதன் காரணமாக, தற்போது ரஷ்யாவின் ஏவுகணைகளை எதிர்கொள்ளத் தேவையான வான் பாதுகாப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு உடனடியாக வழங்க முடியாத ஒரு இக்கட்டான நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் இந்த ஆயுதப் பற்றாக்குறையையும், அமெரிக்காவின் பலவீனத்தையும் புரிந்துகொண்ட ரஷ்யா தனது தாக்குதலை பல மடங்கு தீவிரப்படுத்தி பெரும் பாதிப்பை தற்போது உக்ரைனுக்கு இந்த தாக்குதல் மூலம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications