டிரம்பை சந்திக்கும்போது புதின் கொண்டு வந்ததை கவனிச்சிங்களா! உலகத்தையே காலி செய்யும் 11 கிலோ சூட்கேஸ்
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இன்று சீனாவில் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாட இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது ரஷ்ய கடற்படை தளபதி ஒருவர் தன்னுடன் 11 கிலோ கருப்பு சூட்கேஸை கொண்டு வந்திருந்தது கவனம் பெற்றிருக்கிறது. இது ரஷ்ய அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் பெட்டி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசிக்கொள்வது இதுவே முதல்முறை. சீனாவின் ஷென்சென் நகரில் இந்த சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பில் என்ன விஷயங்கள் பேசப்படும் என்று மொத்த உலகமும் எதிர்பார்த்திருக்கிறது.

ரஷ்யாவை தவிர்க்க முடியாது
பொருளாதாரத்தை பொருத்தவரை அமெரிக்காவும், சீனாவும்தான் உலகை கட்டுப்படுத்தி வருகின்றன. ஆனால், ராணுவ விஷயம்.. குறிப்பாக அணு ஆயுதங்கள் என்று எடுத்துக்கொண்டால் அமெரிக்காவும், ரஷ்யாவும்தான் கெத்து. எனவே, இந்த கலந்துரையாடலில் அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து பேசப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களை கணக்கில் கொண்டால், உலகில் உள்ள 90% அணு ஆயுதங்கள் இவர்களிடம்தான் உள்ளன.
11 கிலோ சூட்கேஸ்
இப்படி இருக்கையில், ரஷ்யாவின் கடற்படை அதிகாரி ஒருவர் தன்னுடன் 11 கிலோ எடை கொண்ட கருப்பு சூட்கேஸ் ஒன்றை கொண்டு வந்திருந்தார். இது சர்வதேச மீடியாக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அமெரிக்காவின் நியூக்ளியர் புஃட்பால் போல.. இது ரஷ்யாவின் அணு ஆயுதபடையை கட்டுப்படுத்தும் பெட்டியாகும். பொதுவாக புதின் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் இந்த பெட்டியும் கையுடன் கொண்டு செல்லப்படும். அவ்வளவு எளிதாக இதை பொது வெளியில் பார்த்துவிட முடியாது. ஆனால், இப்போது இந்த சூட்கேஸ் குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
வெளியான வீடியோ
ரஷ்யா-1 எனும் செய்தி ஊடகம், இந்த சூட்கேஸை படம் பிடித்திருக்கிறது. இதை கொண்டு சென்ற அதிகாரியிடம், "இது அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிட பயன்படும் பெட்டியா?" என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது.. அந்த அதிகாரி ஆம் என்று பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. இந்த சூட்கேஸை 'செகட்' என்று அழைப்பார்கள். இது ரஷ்யாவின் 'காஸ்பெக்' எனப்படும் அணு ஆயுத கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
Putin brought his nuclear briefcase to China with him, Russian propagandist Popov claims.There are many rumors what this briefcase is actually used for. https://t.co/9MYsDPegbh
— Anton Gerashchenko (@Gerashchenko_en) November 18, 2026
பெட்டிக்குள் என்ன இருக்கும்?
இதற்குள் அணு ஆயுதங்கள் எதுவும் இருக்காது. மாறாக.. அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் அதிநவீன கருவி இருக்கும். ரஷ்யா மீது எதிரி நாடுகள் ஏவுகணையை வீசுகிறார்கள் எனில், அதை காஸ்பெக் கண்டுபிடித்து புதினுக்கு தகவல் கொடுக்கும். இந்த தகவல் 'செகட்' பெட்டியின் வழியாகத்தான் தெரிய வரும். பெட்டியை திறந்தால் உள்ளே ஒரு சிறிய ஸ்கிரீன் மற்றும் கீபோர்ட் இருக்கும். இத்துடன் வெள்ளை நிற பட்டனும் இருக்கும்.
புதின் எப்படி உத்தரவிடுவார்?
தாக்குதல் விவரங்கள் கிடைத்தவுடன் புதின், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் ராணுவ தலைமைத் தளபதியுடன் அவசர ஆலோசனை மேற்கொள்வார். ஏனெனில் இவர்களிடமும் இதே போன்ற பெட்டிகள் இருக்கும். ஆலோசனைக்கு பிறகு புதின், பெட்டியில் உள்ள வெள்ளை நிற பட்டனை அழுத்துவார். இந்த சிக்னலை உள்வாங்கி 'காஸ்பெக்', உடனடியாக அணு ஆயுதங்களை ஆக்டிவேட் செய்யும். இதெல்லாம் வெறும் 10-15 நிமிடங்களில் நடந்து முடிந்துவிடும்.
வெறும் 15 நிமிடங்களில்
அணு ஆயுதங்களை பொறுத்தவரை.. அது வந்து தாக்கிய பிறகு, நாம் பதில் தாக்குதல் நடத்தலாம் என்று காத்திருக்க முடியாது. ஏனெனில்.. ஒருமுறை அது வந்து தாக்கிவிட்டால், மீண்டும் தாக்க நம்மிடம் எதுவும் இருக்காது. எனவே, அணு ஆயுதம் எதிரி நாட்டிலிருந்து புறப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன், நாம் பதில் தாக்குதல் நடத்த வேண்டும். அமெரிக்காவிலிருந்து, ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள் வர வெறும் 30 நிமிடங்கள் தான் ஆகும். எனவே 15வது நிமிடங்களில் நாம் தாக்குதல் நடத்த தொடங்கினால்தான் கணக்கு சரியாக இருக்கும். எனவேதான் செகட்-ஐ ஆக்டிவேட் செய்ய அதிகபட்சமாக 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
மொத்தத்தில், அணு ஆயுதங்களை குறைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு, 'செகட்' பெட்டியுடன் புதின் என்ட்ரி கொடுத்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
