சவுதியில் எண்ணெய் வளமிக்க கிழக்கு பகுதியில் ரெய்டின் போது துப்பாக்கிச்சூடு: போலீஸ்காரர் பலி
ரியாத்: சவுதியின் கிழக்கு பகுதியில் உள்ள அவாமியா நகரில் சோதனை நடத்தியபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் பலியானார், 5 பேர் காயம் அடைந்தனர்.
சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அவாமியா நகரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீசார் அந்த நகரில் அதிரடி சோதனை நடத்தி அதிநவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது 4 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் போலீஸ்காரரான கார்பரல் மஜித் பின் துர்கி அல் கஹ்தானி படுகாயம் அடைந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போலீஸ்காரர்கள், ஒரு சவுதி குடிமகன் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் காயம் அடைந்தனர்.
போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சவுதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சன்னி முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் நாடு சவுதி அரேபியா. ஆனால் எண்ணெய் வளம் அதிகம் உள்ள சவுதியின் கிழக்கு பகுதியில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். அண்டை நாடுகளான ஏமன், ஈராக் மற்றும் சிரியாவில் ஷியா, சன்னி பிரிவு முஸ்லீம்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் சவதியின் கிழக்குப் பகுதியில் பதட்டம் அதிகரித்து வருகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் அவாமியா பகுதியில் ஏற்பட்ட மோதலில் 4 போராளிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications