மூக்குடைபட்ட பாகிஸ்தான்.. சீனாவில் வைத்து இந்தியா செய்த தரமான சம்பவம்.. இதுதான் உண்மையான வெற்றி
பெய்ஜிங்: பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் சீனா சென்றுள்ளார். இதற்கிடையே பஹல்காம் தாக்குதலை இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கண்டித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள போதிலும், அதையும் தாண்டி பஹல்காம் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இது பிரதமர் மோடிக்கும் இந்தியாவுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் சீனாவுக்குச் சென்றுள்ளார். தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், பிரதமர் மோடி சீனாவுக்குச் சென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
மேலும், டிரம்ப் வரி காரணமாக இந்தியா அமெரிக்கா உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தச் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. தீவிரவாதத்தின் மீது சில நாடுகள் இரட்டை நிலைப்பாடுகள் கொண்டுள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என்பதை ஷாங்காய் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் கூற வேண்டும் என்பதை மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்தியாவுக்கு வெற்றி
மோடி வலியுறுத்திய சிறிது நேரத்திலேயே பயங்கரவாதத் தாக்குதலை அறிக்கையில் குறிப்பிட்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ராஜதந்திர ரீதியில் இந்தியாவுக்கு இது மிகப் பெரிய பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக நீண்ட காலமாக இந்திய மண்ணில் தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான் இந்த மாநாட்டில் உறுப்பினராக இருக்கிறது. அதன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இம்மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார். அப்படி இருந்தாலும் பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டுக் கண்டித்துள்ளது இந்தியாவின் முக்கிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உறுப்பு நாடுகள் கடுமையாகக் கண்டித்தன. இத்தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள், திட்டமிட்டவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஏற்க முடியாது
தீவிரவாத, பிரிவினைவாத குழுக்களைச் சிலர் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என உறுப்பு நாடுகள் மீண்டும் வலியுறுத்தின. அனைத்து வடிவங்களிலும் உள்ள பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக எஸ்சிஓ நாடுகள் வலியுறுத்தினர்.. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அது குறிப்பிட்டு இருந்தது. எல்லை தாண்டிய தீவிரவாத நகர்வுகள் உட்பட அனைத்தையும் தடுக்கச் சர்வதேச சமூகத்திற்கு அவை அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி
முன்னதாக இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "சமீபத்தில், பஹல்காமில் ஒரு மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது . இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு ஆதரவாக நின்ற நண்பர்களுக்கு நன்றி. இது இந்திய ஆன்மாவின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மனிதநேயத்தை நம்பும் ஒவ்வொரு நாட்டிற்கும் விடுக்கப்பட்ட ஒரு வெளிப்படையான சவால். சில நாடுகள் வெளிப்படையாகப் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நிலையில், அதை நாம் கண்டிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை இன்றியமையாதவை . தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை பெரிய சவால்களாக உள்ளன. தீவிரவாதம் என்பது குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை. இது மனிதக் குலத்திற்கான சவால். அதனால்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒற்றுமையை வலியுறுத்துகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications