ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில்.. 100 இந்தியர்கள் உட்பட 1300 பேர் உயிரிழப்பு!
ரியாத்: சவுதியில் இந்த ஆண்டு வெயில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததால், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியர்கள் 100 பேர் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹஜ் புனித பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாக இருக்கிறது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொண்டு விட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஹஜ் புனித யாத்திரையில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை சவுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் புனித பயணத்திற்கு வந்த யாத்திரிகள் சிலர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்காளாக சவுதியில் 51 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்தது. இப்படியாக அதிகப்படியான வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக, யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது பயணிகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய தங்கும் இடங்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
இருப்பினும் வெயில் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் வெயில் தாக்கத்தால் 19 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் வரை இந்தியர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்று உயிரிழப்புகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 30 ஆண்டுகளில், ஹஜ் பயணத்தின்போது நெரிசல்கள், தீ விபத்து, வெயிலின் தாக்கம் உள்ளிட்டவற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் புனித பயணத்திற்கு எத்தனை பேர் வரை வர வேண்டும் என்று நாங்கள் மதிப்பீடு செய்து அந்த எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். இந்த ஆண்டு 18 லட்சம் யாத்திரிகளுக்கு நாங்கள் அனுமதி கொடுத்திருந்தோம். இதற்கான விசாவை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும்.
அதற்கேற்ப குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து, தங்குமிடம், குடிநீர், உணவு என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். அவர்கள் புனித பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம். ஆனால், சிலர் இந்த வழிமுறையை தவிர்த்து சில ஏஜென்சிகள் மூலம் வருகின்றனர். இவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படாது.
பாலைவனத்தில், கடும் வெயிலில் அவர்கள் நடந்து புனித பயணத்திற்கு வருகின்றனர். இப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகவும், இணைநோய் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். உணவு, குடிநீர் போன்றவை கிடைக்காதபோது அவர்கள் உயிரிழந்துவிடுகின்றனர். உயிரிழந்தவர்களில் 83% பேர் முறையற்ற பயணம் மேற்கொண்டவர்கள்தான். இந்த உயிரிழப்புகளுக்கு நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்களின் இறுதி சடங்கு, இறப்பு சான்றிதழ் போன்றவற்றிற்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு ஹஜ்ஜில் வெப்ப நிலை கடுமையாக உயரும் என்று சவுதி நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சவுதி தேசிய வானிலை மையத்தின் தலைவர் அய்மன் குலாம் இது குறித்து, "இந்த ஆண்டு மெக்கா மற்றும் மதீனாவில் சராசரி வெப்பநிலை 1.5 முதல் 2 டிகிரி வரை அதிகரிக்கும். சராசரி அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸும், ஈரப்பதம் 25% எனவும் இருக்கும்" என்று கூறியிருந்தார். இந்த வெப்பநிலை உயர்வும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications