விவாகரத்துக்கு தடபுடல் பார்ட்டி! திருமண விழா போல் கேக் வெட்டி கொண்டாடிய இளம்பெண்.. பின்னணி
சியோல்: ''திருமணத்தை தான் ஆடம்பரமாக கொண்டாட வேண்டுமா? ஏன் விவாகரத்தை ஆடம்பரமாக கொண்டாடக்கூடாதா?''.. இல்லவே இல்லை.. விவாகரத்தையும் கூட நண்பர்களை அழைத்து திருமண விழா போல் கேக் வெட்டி கொண்டாடி இணையதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார் தென்கொரியாவை சேர்ந்த 37 வயது பெண். அனைவராலும் சோகமாக பார்க்கப்படும் விவாகரத்தை இந்த பெண் உற்சாகமாக கொண்டாட தூண்டியது எது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
திருமண விழா போல் விவாகரத்து விழாவை நடத்தி கவனம் பெற்றுள்ள பெண்ணின் பெயர் சோ சியுங் - யியோன். இவருக்கு வயது 37. இவர் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார். கன்டென்ட் கிரியேட்டராகவும் உள்ளார். இவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சோ சியுங் மனம் உடைந்து போனார். கணவருடனான பிரச்சனையை சமாளிக்க முயன்றார். அது முடியவில்லை. இதனால் சோ சியுங் தனது கணவரை பிரிய திட்டமிட்டு விவாகரத்து கோரினார்.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. தனது குழந்தையுடன் அவர் வாழ தொடங்கி உள்ளார். இதற்கிடையே தான் கணவரிடம் இருந்து பெற்ற விவாகரத்தை அவர் விழாவாக கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான வீடியோவை சோ சியுங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''எனக்கு உதவிய என்னுடைய மக்களுக்கு நன்றி. ஐ லவ் யூ'' என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிக கவனம் பெற்று வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சோ சியுங் தன்னுடைய நண்பர்களை அழைத்து 'பார்ட்டி' வைத்தார். திருமண விழாவிற்கு அணிவது போன்று பளபளப்பான ஆடையை அவர் அணிந்திருந்தார். தோழிகளுடன் போட்டோ எடுத்து கொண்டு பெரிய கேக் வெட்டி தனக்கு விவாகரத்து கிடைத்ததை கூறி மகிழ்ந்தார். அவரை தோழிகள் உற்சாகப்படுத்துகின்றனர்.
விவாகரத்து என்பது தோல்வி அல்ல. அது வாழ்க்கையில் அடுத்தக்கட்ட நகர்வுக்கான தொடக்க புள்ளி என்பதை எடுத்துரைக்க சோ சியுங் இப்படி செய்தார். அதுமட்டுமின்றி விவாகரத்தான பெண்கள் மீதான சமூக பார்வையை மாற்றவும் அவர் இந்த விழாவை எடுத்தார்.
சோ சியுங் தனது விவாகரத்தை விழா போல் கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பல பெண்கள் விவாகரத்துக்கு பிறகு மனதளவில் உடைந்து போகிறார்கள். இப்படியான சூழலில் சோ சியுங் மனதளராமல் மற்ற பெண்களுக்கும் தைரியம் கொடுக்க இப்படி செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளனர்.
அதேவேளையில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது தென்கொரியாவில் தம்பதி இடையேயான விவாகரத்து அதிகரித்து வருவதோடு, அதனை விழாவாக கொண்டாடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இது தென்கொரியாவிற்கு கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
