"அமெரிக்கா + ஜப்பான்.." ஒரே நேரத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்ட இரு லேண்டர்கள்! அசத்திய ஸ்பேஸ்எக்ஸ்
வாஷிங்டன்: நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள இரு தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான லேண்டரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இன்று விண்ணுக்கு அனுப்பியது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு லேண்டர்களை ஒரே நேரத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியது விண்வெளி ஆய்வில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலா குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்தது. அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களைக் கூட நிலவுக்கு அனுப்பி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. விண்வெளி ஆய்வில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போரே நிலவியது.

ஆனால், அதன் பிறகு நிலவு குறித்த ஆய்வுகள் குறைந்தன. பெரியளவில் இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில ஆண்டுகளாக நிலா குறித்த ஆய்வுகள் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்:
இன்று புதன்கிழமை காலை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட் மூலம் நிலவில் இறங்கி ஆய்வுகளைச் செய்யக்கூடிய இரண்டு லேண்டர்களை அனுப்பியது. ஸ்பேஸ் துறையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் சூழலில், பால்கன் 9 ராக்கெட்டில் மூலம் இந்த லேண்டர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.
ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ப்ளூ கோஸ்ட்-1 மற்றும் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் ஹகுடோ-ஆர் மிஷன் 2 ஆகிய லேண்டர்கள் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.. அவை நிலவிற்குச் சென்று பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதில் ப்ளூ கோஸ்ட்-1 அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சாட்டிலைட் ஆகும். ஹகுடோ-ஆர் மிஷன் 2 ஜப்பானில் உருவாக்கப்பட்டது.. இதுபோல இரு வேறு நாடுகளில் இரு வேறு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சாட்டிலைட்கள் ஒரே நேரத்தில் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ப்ளூ கோஸ்ட்
இதில் ப்ளூ கோஸ்ட்-1 என்பதை அமெரிக்காவில் உள்ள தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் உருவாக்கியது. நாசாவின் வர்த்தக லூனார் பேலோட் சர்வீசஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேண்டர் 45 நாட்களில் நிலாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு இரண்டு வாரம் வரை சயின்ஸ் ஆய்வுகளை மேற்கொள்ளும் ப்ளூ கோஸ்ட், சந்திரனில் சூரிய அஸ்தமனம் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்யவுள்ளது.
மேலும், சந்திரனில் 10 அடி ஆழம் வரை ஒவ்வொரு பகுதியிலும் வெப்பம் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. கடந்த காலங்களில் சந்திரனில் வெப்பம் எந்தளவுக்கு இருந்துள்ளது என்பதைக் கண்டறிய இது உதவும்.
ஹகுடோ-ஆர் மிஷன் 2:
அடுத்தது ஹகுடோ-ஆர் மிஷன் 2.. இதை ஜப்பானைச் சேர்ந்த ஐஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. நிலவை அடைய ப்ளூ கோஸ்ட்டை விட இது அதிக காலம் எடுத்துக் கொள்ளும். சுமார் 4 அல்லது 5 மாத பயணத்திற்கு பிறகே இது நிலவை அடையும். நிலவின் வட துருவத்தில் தரையிறங்கும்படி இது டிசைன் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே ஐஸ்பேஸ் நிறுவனம் நிலவில் தரையிறங்க ஒரு லேண்டரை அனுப்பி இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. அப்போது கிடைத்த டேட்டாக்களை வைத்துக்கொண்டு மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஜப்பான் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.











Click it and Unblock the Notifications