இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.. 70% ஓட்டுகள் பதிவு! இன்று நள்ளிரவில் வரும் முதல் சுற்று ரிசல்ட்!
கொழும்பு : இலங்கை அதிபர் பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இலங்கையில் வெடித்த போராட்டம், பொருளாதார நெருக்கடி பிரச்சனைக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் 70% சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இலங்கை அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மொத்தம் 225 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் எஸ்எல்பிபி எனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 105 இடங்களை வென்றது. இது ராஜபக்சேவின் கட்சியாகும். ரணில் விக்கிரமசிங்கேவின் யுஎன்பி கட்சி 3 இடங்களை வென்றது. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை பிடித்தன. இதில் எஸ்எல்பிபி கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனார்.

இந்த ஆட்சி கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலைந்தது. பொருளாதார நெருக்கடி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களின் போராட்டம் உள்ளிட்டவற்றால் இலங்கையில் வன்முறை வெடித்த நிலையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சேவும், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்படார். தற்போது இலங்கை மெல்ல மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. இதற்கிடையே தான் இன்று இலங்கையில் ஒரே கட்டமாக அதிபர் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர், இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்பார். இலங்கையை பொறுத்தவரை அதிபரின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகளாகும். இதனால் இந்த தேர்தலில் அதிபராக தேர்வாகும் நபர் 2029ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் செயல்படுவார்.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில்விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதேபோல் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திஸனநாயகே, எதிர்க்கட்சி தலைவராக உள்ள எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்கள் உள்பட மொத்தம் 38 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இலங்கையை பொறுத்தவரை மக்கள் தொகை என்பது 2.2 கோடியாக உள்ளது. இதில் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியுடைவர்களாக உள்ளனர். கடந்த 11, 12 ஆகிய தேதிகளல் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்றது. மக்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 13,134 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
அதிபர் வேட்பாளர்களான சஜித் பிரேமதாசா ராஜகிரிய கொடுவேகொட விவேகராம் புராண விகாரையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளித்தார். கொழும்பு சாய்கோஜி சிறவர் பள்ளியில் அனுர குமாரதிஸாநாயக்கா ஓட்டளித்தார். நாமல் ராஜபக்சே அம்பாந்தோட்டை தொகுதியில் டிஏ ராஜபக்சே மகா வித்தியாலாவில் ஓட்டளித்தார். ஈழத்தமிழர் பொதுவேட்பாளரான அரியநேந்திரன் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலத்தில் வாக்களித்தார். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் 12 மணிவரை 40 சதவீத வாக்குகள் பதிவாகின. களுத்துறை - 60%, நுவரெலியா - 45%, முல்லைத்தீவு-46% ஓட்டுகள் பதிவாகி உள்ளது. வவுனியா- 51%, இரத்தினபுரி- 58%, கேகாலை- 49%, மன்னார்- 40%, கம்பஹா - 52%, கொழும்பு - 50%, காலி - 42%, மாத்தறை - 35%, குருநாகல் - 50%, பொலன்னறுவை - 44%, மொனராகலை - 65%, ஹம்பாந்தோட்டை - 60%, யாழ்ப்பாணம் - 40%, புத்தளம் - 42 %, கண்டி 40%, ராதபுரம் - 60% ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இலங்கையை பொறுத்தவரை தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது இல்லை. அங்கு வாக்குச்சீட்டு முறை தான் நடைமுறையில் உள்ளது. அதேபோல் நம் நாட்டில் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான் வாக்களிக்க முடியும். ஆனால் இலங்கையில் வாக்குச்சீட்டில் பொதுமக்கள் முன்னுரிமை அடிப்படையில் 1, 2, 3 என்று 3 வேட்பாளர்களை தேர்வு செய்யலாம்.
அதன்பிறகு உடனடியாக ஓட்டு எண்ணிக்கை என்பது நடைபெற உள்ளது. இன்று இரவு 9.30 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி என்பது நடைபெற உள்ளது. நள்ளிரவில் யார் வெற்றி பெறுவார் என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும். நாளைக்குள் முழு ரிசல்ட்டும் வெளியாகிவிடும். வாக்கு எண்ணும்போது முதல் சுற்று எண்ணிக்கையில் பொதுமக்கள் செலுத்திய வாக்குகளில் 50 சதவீதம் பெற்றவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒருவேளை முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதம் வாக்கு கிடைக்கவில்லை என்றால் 2வது சுற்று எண்ணிக்கை நடக்கும். இந்த 2வது சுற்று எண்ணிக்கை என்பது முதல் சுற்றில் முதலிடம் மற்றும் 2வது இடம் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே எடுத்து கொள்ளப்படுவார்கள். மற்ற வேட்பாளர்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இருப்பினும் நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கிய வாக்குச்சீட்டுகளில் இரண்டாவது விருப்பமாக‛டாப்' 2 வேட்பாளர்களில் பொதுமக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கிட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் வெல்லும் நபர் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்பார்.
தற்போதைய சூழலில் இலங்கை அதிபர் தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கே, அனுர குமார திஸனநாயகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் இடையே தான் கடும் போட்டி உள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலையொட்டி இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராணுவம், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications