பொது இடங்களில் புர்கா அணிய தடை... நிறைவேறியது புதிய சட்டம்
பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பியாவின் சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மூடும் வகையிலான ஆடைகளை தடை செய்யும் மசோதா கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொது இடங்களில் முகமூடி அணிந்தவாறு நடத்தப்படும் வன்முறைகளையும், தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சட்டம் இஸ்லாமியர்கள் அணியும் புர்காவை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்தாலும்கூட அந்நாட்டிலுள்ள தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் இதை புர்கா தடை சட்டம் என்றே அழைக்கின்றனர்.

அடிப்படைவாத இஸ்லாத்தின் சின்னம்
சுவிட்சர்லாந்து நாட்டின் கலாசாரத்தின்படி மக்கள் பொது இடங்களில் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும், அதுவே நம் அடிப்படை உரிமை என்றும் இச்சட்டத்தை முன்மொழிந்த வால்டர் வோப்மேன் தெரிவித்தார். மேலும், முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிவது தீவிர அடிப்படைவாத இஸ்லாத்தின் சின்னம் என்றும் இதற்கு சுவிட்சர்லாந்தில் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்கெடுப்பில் வெற்றி
இந்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்து அரசே இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டது. இருப்பினும் இதில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை தடை செய்ய ஆதரவாக 51.2% பேரும் எதிராக 48.8% பேரும் வாக்களித்துள்ளனர்.

நாட்டில் என்ன நிலை
இதன் காரணமாக பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிய தடை செய்யும் புதிய சட்டம் அந்நாட்டில் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 86 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சுவிட்சர்லாந்தில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இஸ்லாமியர்கள். அவர்களிலும் பெரும்பாலானோர் புர்கா அணிவதில்லை. அங்கு அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புர்கா அணிகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள்
கடந்த 2011ஆம் ஆண்டு ஐரோப்பாவின் பிரான்ஸ் நாட்டில் முதல்முதலாக கடந்த புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது, அதன் பின்னர் டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளும் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications