ஆப்கான் அதிபர் மாளிகைக்கு வந்த தாலிபான் தூதர்.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை.. இன்றே ஆட்சி மாற்றம்?
காபுல்: ஆப்கானிஸ்தானில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
Recommended Video
தாலிபான் வந்துவிட்டது.. இந்த வார்த்தையை கேட்டவுடன் காபுல் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற பெண்கள் கதறி அழ தொடங்கினார்கள். வெளிநாட்டுக்கு செல்ல விமான டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி இடியாக வந்தது. எங்கே காபுலை தாலிபான்கள் பிடித்தால் நம்மால் வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் ஆப்கான் பெண்கள் அங்கு கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
தாலிபான் ஆட்சிக்கு கீழே பெண்களின் நிலை மோசமாகலாம் என்பதால் ஏற்பட்ட பதற்றம் இது. ஆம் ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு மாகாணமாக பிடித்து வந்த தாலிபான்கள் இன்று காலை காபுல் அருகே இருக்கும் ஜலாலாபாத் என்ற நகரத்தை பிடித்தது. இதனால் காபுல் மட்டுமே ஆப்கானிஸ்தானில் மிச்சம் இருந்தது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் காபுல் எல்லைக்கு உள்ளேயும் தாலிபான்கள் நுழைந்துவிட்டது. காபுல் முழுக்க பொது இடங்கள் அனைத்திலும் தாலிபான்கள் உள்ளே நுழைந்தது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மணி நேரம்
கடந்த 10 மணி நேரங்களில் ஆப்கானிஸ்தானில் எதிர்பார்க்காத திருப்பங்கள், மாற்றங்கள் நடந்து விட்டன. ஜாலாலாபாத் அருகே தாலிபான்கள் வந்ததில் இருந்து தற்போது ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் பேச்சுவார்த்தை வரை என்னென்னெ விஷயங்கள் ஆப்கானிஸ்தானில் கடந்த 10 மணி நேரத்தில் நடந்தது என்று பார்க்கலாம்.
அதிகாலை 5 மணிக்கு தாலிபான்கள் ஜலாலாபாத் எல்லை அருகே வந்தது.
காலை 9 மணிக்கு ஜலாலாபாத் பகுதியை தாலிபான்கள் கைப்பற்றின. எந்த மோதலும் இல்லாமல் தாலிபான்கள் இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. பேச்சுவார்த்தை மூலம் தாலிபான்கள் உள்ளே நுழைந்தது.

150 கிலோ மீட்டர்
அதன்பின் அங்கிருந்து 120 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் காபுல் எல்லைப்புற கிராமங்களுக்கும், மாவட்டங்களுக்கு தாலிபான்கள் விரைந்தன. டாங்கிகள், ஜீப்களில் தாலிபான் படைகள் வேகமாக முன்னேறின. இடையில் சில இடங்களில் ஆப்கான் படைகள் இருந்தாலும் எங்கும் தாலிபான்களை யாரும் தடுக்கவில்லை.
பிற்பகல் 1 மணி அளவில் தாலிபான்கள் காபுல் எல்லையோர மாவட்டங்களை அடைந்தன. இங்குதான் தாலிபான்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டன. ஜலாலாபாத் பகுதி இருந்து மட்டும் வரமால் மற்ற மூன்று திசைகளில் இருந்தும் தாலிபான்கள் காபுல் நோக்கி ஒரே நேரத்தில் வந்து காபுலை சுற்றி வளைத்தன.
ஆனால் தாலிபான்கள் எல்லைக்கு உள்ளே வந்துவிட்டு, அதற்கு மேல் உள்ளே செல்லாமல் அங்கேயே ஹால்ட் அடித்தனர்.

என்ன காரணம்
இவர்கள் எல்லைக்கு உள்ளே ஹால்ட் அடிக்க 2 காரணம். முதல் காரணம் அமெரிக்க அதிகாரிகள் வெளியேற வேண்டும். இரண்டாவது காரணம் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனால் தாலிபான் படைகள் அதற்கு மேல் முன்னேற கூடாது என்று தாலிபான் தலைமைகளிடம் இருந்து உத்தரவு சென்றது.
இந்த நிலையில்தான் தாலிபான் படைகள் அமைதியானது. இதையடுத்து தாலிபான் அமைப்பின் முக்கியமான தூதர்கள் சிலர் தற்போது ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகைக்கு அரசு நிர்வாகிகளை சந்திக்க சென்றுள்ளனர். அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடத்தும் முடிவில் தாலிபான்கள் உள்ளனர்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் 2 மணி நேரமாக நடக்கிறது. ஆப்கானிஸ்தான் அதிபர் பதவி விலக வேண்டும். எந்த மோதலும் இருக்க கூடாது. தாலிபான்களிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நேட்டோ
இன்னொரு பக்கம் நேட்டோ படைகளுடனும் அமெரிக்க அதிகாரிகளுடனும் அதிபர் அஷ்ரப் கானி போனில் பேசி வருகிறார். அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேறி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது குறித்து அஷ்ரப் கானி போனில் பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாலிபான்கள் ஆட்சியில் இவர் உயிருக்கு ஆபத்து உள்ளதால் இவர் அங்கிருந்து வெளியேற பேசி வருவதாக கூறப்படுகிறது.
தாலிபான்கள் எல்லைக்கு உள்ளே வந்துவிட்டதால் அமெரிக்க அதிகாரிகள், யுகே தூதரக அதிகாரிகள் வெளியேறி வருகிறார்கள். ஆனால் ரஷ்ய அதிகாரிகள் வெளியேறவில்லை.

பேச்சுவார்த்தை முடிவு
பேச்சுவார்த்தையில் தற்போது வரை பேசப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அஷ்ரப் கானி பதவி விலகி வேறு ஒரு நபர் அதிபர் ஆவார். அவர் டிரான்சிஷன் அதிபராக இருப்பார். பின்னர் அவரிடம் இருந்து தாலிபான்களுக்கு ஆட்சி பரிமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் என்ன நடக்கும், ஆட்சி மாற்றம் ஏற்படுமா, இல்லை பேச்சுவார்த்தை தொடருமா என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகும். பெரும்பாலும் இன்று மாலைக்குள் ஆட்சி மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
தாலிபான்கள் காபுல் உள்ளே வந்த நிலையில் அங்கிருந்து மக்கள் வேகமாக வெளியேறி வருகிறார்கள். அங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது. விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

படைகள்
இதனால் அமெரிக்கா தற்போது 3000 படைகள் வரை காபுலில் குவித்துள்ளது. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் தாலிபான்கள் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், மக்கள் வெளியேற வேண்டாம். நாங்கள் அமைதியான ஆட்சியையே நடத்துவோம். மக்கள் நம்பிக்கையாக இருக்கலாம். இனி போர் நடக்காது. அமைதியாக ஆட்சி மாற்றம் ஏற்படும், என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications