வால்மார்ட் தலைநகரில் வெற்றிக் கொடி நாட்டிய 'கிராம சந்தை'!
பெண்டன்வில்(யு.எஸ்): வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டின் தலைமையிடமான அர்க்கான்சா மாநில பெண்டன்வில் நகரில், தமிழர்களின் 'மண்வாசனை' பொங்கல் விழாவின் அங்கமான 'கிராம சந்தை' பெரும் வரவேற்பை பெற்றது.

மண்வாசனை பொங்கல் விழா 2014
பெண்டன்வில் நகரிலும், நகரைச் சுற்றிலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். கடந்த பதிமூன்று வருடங்களாக பொங்கல் விழாவை சிறப்பாக அங்கு கொண்டாடி வருகிறார்கள். மண்வாசனை என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் நடனங்கள், குறுநாடகம், குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள், பறை நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த ஆண்டு புதிதாக கிராம சந்தையை உருவாக்கி நிஜமாகவே தமிழக மண்வாசனையை அமெரிக்காவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்

சூப்பர்ஸ்டார் டீக்கடையும் கமல் போட்டோ ஸ்டூடியோவும்
பெஞ்சு, பேப்பர்கள், பிஸ்கட் வடை, டீ என நம்மூர் டீக்கடையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து சூப்பர் ஸ்டார் டீக்கடை என்ற பெயரில் திறந்து விட்டனர். அருகில் வரிசையாக கமல் போட்டோ ஸ்டூடியோ, கருமாரியம்மன் கூழுக்கடை, ஸ்ரீதேவி வளையல்கடை, வருத்தப்படாத வாலிபர்களின் சங்கம், பஞ்சாயத்து கூடம் என தமிழகத்தின் ஒரு கிராமத்தை இடம்பெயர்த்து கொண்டு வந்து விட்டனர்.

ஊர்ப் பொங்கல்
பஞ்சாயத்து போர்டு டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப, வைக்க்கோல் போர், ஏர், வண்டிச்சக்கரக்கங்ள் ஓரமாக இருக்க ஊர் மத்தியில், கிராமிய நடனத்துடன் பொங்கல் வைத்து குலவையிட்டு, கும்மி அடித்து, பறையிசை முழங்கி விழாவை ஆரம்பித்தனர், விளக்கு ஏற்றி, சூடம் காட்டி அச்சுப்பிசகாமல் அப்படியே கிராமப் பொங்கலை நினைவு படுத்தினர். பலூன் உடைக்கும், குயிக் கன் முருகன் பலூன் கடை கூட இருந்தது.
சந்தைக்கு வரும் கூட்டத்தினரை, மைக் செட்டு சகிதம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் வரிசைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் சின்னதம்பி பெரியதம்பி களாக இரண்டு பேர் வந்தவர்களின் ஊர் விலாசம் கேட்டு வம்பளத்துக் கொண்டிருந்தார்கள்.

தஞ்சையிலிருந்து வந்த சந்தைப் பொருட்கள்
சந்தைக்கு தேவையான பொருட்கள் தஞ்சாவூரிலிருந்து விழாவுக்காகவே தருவிக்கப்பட்டிருந்தது.. ஃப்ளெக்ஸ் போர்டுகள், வளையல், தோடுகள், பாசிமணி, ஹேர்பின், கொண்டை.ஊசி என அனைத்து ஐட்டங்களும் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. தஞ்சாவூர் ஸ்பெஷல் சாப்பாட்டு இலை கூட தருவித்திருந்தார்கள்.

ஆவேசத்துடன் அம்மன் நடனம்
பெண்டன் அம்மன் நடனக் குழுவினர் அம்மன் சன்னதியில் நடனம் ஆடுவது போல் செட் போட்டு பல்வேறு பாடல்களுக்கு ஆடினார்கள். குடிகாரக் கணவன் அம்மனை பார்த்து சவால் விடுவதாகவும், அதனை பார்த்து அது வரையிலும் சிலையாக இருந்தவர் ஆவேசமாக எழுந்து அம்மனாக நடனம் ஆடியதை பார்த்த பார்வையாளர்கள், இது நிஜம் தானோ என்று ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர்.

பறையிசை நடனமும் சிலம்பாட்டமும்
செயிண்ட்லூயிஸ் அமெரிக்க தமிழ் கலைக்குழுவினரின் பறையிசை நடனம் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழுவைச் சார்ந்த பொற்செழியன் தமிழர்களின் பாரம்பரியக் கலையான பறையிசை நடனம் மற்றும் சிலம்பாட்டம் குறித்து எடுத்துக் கூறினார். பறையிசை நடனத்தையும், சிலம்பாட்டத்தையும் முதன் முறையாக கண்ட பார்வையாளர்கள் அதனை அதிசயமாகப் பார்த்தார்கள்.

மூன்றாம் உலகத்தில் டி.ராஜேந்தர்
பெண்டன்வில்லில் பெண் கிடைக்காத டி.ராஜேந்தர், பெண் பார்க்க மூன்றாம் உலகத்திற்கு செல்ல, அங்கே பேட்மேனும் ஸ்பைடர் மேனும் அவருக்கு போட்டியாக வர, கலகலப்பான குறு நாடகம் அரங்கம் ஏறியது. அவர்கள் மூவரும் போட்டி போட்டது 'ஹல்க்' கின் தங்கை 'குல்க்கு' வை மயக்குவதற்காக என்பது கூடுதல் தகவல்.

கேஷுவல் க்ளூலெஸ் கூட்டம்
க்ளூலஸ் கூட்டம் என்ற குழுவினரின்- கலகலப்பான நடனம் விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியாக அமைந்தது. இதற்கு தானா ஆசைப்பட்டாயா பாலகுமாரா படப்பாடலில் வரும் லண்டன் பிரிட்ஜ் வரிகளுக்கு ஒரிஜினல் அமெரிக்கர்களையே நடனம் ஆட வைத்துவிட்டனர். அதற்காக லுங்கி, ட்ராயர் அணிந்து வீடியோ பார்த்து பிரத்யேக பயிற்சியில் ஈடுபட்டனர்., அவர்களின் நம்மூர் குத்து நடன ஸ்டைல் ஆட்டத்தை, கூட்டத்தினர் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

டீக்கடையில் நடந்த விழாத் தொகுப்புரை
மேடையின் ஓரத்தில் டீக்கடை அமைத்து, வம்பளக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி, தொகுத்து வழங்கியிருந்தார்கள். வருகை தந்திருந்த பார்வையாளர்களிடம் 1500 டாலர்கள் நன்கொடை வசூல் (கிட்டத்தட்ட உண்டியல் வசூல் போல்) செய்து மாதா அறக்கட்டளை மற்றும் தீக்ஷா கல்வித் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்கள். விழாவின் அங்கமாக தமிழ் கவிதைப் போட்டிகளும் இடம்பெற்றன.

பதினாறு வகை உணவு
மதிய உணவாக சக்கரைப் பொங்கல், வடை பாயசம், அப்பளம் சாம்பார், பொறியல், அவியல், சாம்பார், போளி உள்ளிட்ட பதினாறு வகை பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.

சகாயம் எஃபெக்ட்
சுமார் 750 பேர் விழாவுக்கு வருகை தந்திருந்தார்கள். பெரும்பாலானோர் வேட்டி சட்டை, சேலை என பாரம்பரிய உடையில் வந்திருந்தார்கள். சகாயம் விடுத்த 'வேட்டி வேண்டுகோள்' அமெரிக்காவிலும் எதிரொலிக்கிறதோ என்று எண்ணும் வண்ணம் இருந்தது.
பதிமூன்று வருடங்களாக தொடர்ந்து பொங்கல் விழாவை நடத்தி வரும் பெண்டன்வில் தமிழ் நண்பர்கள், எந்த ஒரு சங்கம் அல்லது அமைப்பு ரீதியாக இல்லாமல், சக தமிழர்கள் என்ற தோழமை உணர்வுடன் மட்டுமே இதை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சுமார் பதினைந்து பேர் கூட்டாக முக்கிய பொறுப்புகளை ஏற்று, உடன் நூற்றுக்கும் அதிகமான பேர்களை இணைத்துக் கொண்டு இதை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications