45 % தள்ளுபடியில் ‘மோசமான’ குழந்தைகள் விற்பனைக்கு... பேஸ்புக் விளம்பரத்தால் சர்ச்சை
வாஷிங்டன்: மோசமான குழந்தைகள் தள்ளுபடியில் விற்பனைக்கு என கைகளை பிளாஸ்டிக் டேப்பால் கட்டி, வாயும் டேப்பால் ஒட்டப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியான சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் வித்தியாசமான பதிவு ஒன்று வைரலாக உலா வந்தது. அதில், இரண்டு சிறிய குழந்தைகளின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அக்குழந்தைகள் கைகள் மற்றும் வாய் டேப்பினால் ஒட்டப்பட்டிருந்தது.

அதோடு கூடவே, அந்தப் பதிவில் இந்தக் குழந்தைகள் இரண்டும் விற்பனைக்கு என்றும், மோசமான குழந்தைகள் என்பதால் 45 சதவீத தள்ளுபடியில் விற்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகப் பரவியது. இதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து டென்னிசி குழந்தைகள் சேவை மையம் போலீசில் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், சம்பந்தப்பட்ட அந்தப் பேஸ்புக் பக்கத்தை முடக்கினர்.
இந்தப் பதிவை அக்குழந்தைகளின் தாய் விளையாட்டாக பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதிக சேட்டை செய்பவர்கள் தன் குழந்தைகள் என்பதற்காக அவர் அவ்வாறு பதிவை வெளியிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications