ஜப்பான் சரணடைந்த அன்று... அமெரிக்க வீரர் முத்தமிட்ட நர்ஸ் 92 வயதில் மரணம்!
நியூயார்க்: 2ம் உலகப் போரின்போது, ஜப்பான் சரணடைந்த அன்று, அமெரிக்காவில், நியூயார்க் நகரில் அமெரிக்கக் கடற்படை வீரரால் முத்தமிடப்பட்ட நர்ஸ் தனது 92வது வயதில் மரணமடைந்தார்.
உலக மக்களால் மறக்க முடியாத புகைப்படத்தில் இடம் பெற்றவர் இந்த நர்ஸ். அவரது பெயர் கிரேட்டா ஜிம்மர் பிரைட்மேன். ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர் தனது 15வது வயதில் அமெரிக்கா குடும்பத்துடன் தப்பி வந்தவர். இரண்டாம் உலகப் போர் உக்கிரத்தில் இருந்தபோது கிரேட்டா, பல் மருத்துவ உதவியாளர் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தார். அதாவது நர்ஸ் படிப்பை படித்து வந்தார்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. இதை அமெரிக்கர்கள் விழா போல கொண்டாடினர். நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி கொண்டாடினர். போரில் கலந்து கொண்ட வீரர்கள் நாடு திரும்புவதை வரவேற்கவும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்களில் கிரேட்டாவும் ஒருவர்.

அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கடற்படை வீரர், கிரேட்டாவைக் கட்டிப்பிடித்து வளைத்து அவரது உதட்டில் முத்தமிட்டார். இதை ஆல்பிரட் ஈசன்ஸ்டெட் என்பவர் புகைப்படம் எடுத்தார். அது உலக அளவில் வைரல் ஆகப் பரவிய புகைப்படமாக பின்னர் மாறியது. அந்த நர்ஸ்தான் தற்போது மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 92.
கிரேட்டாவுக்கு கிஸ் கொடுத்த வீரரின் பெயர் ஜார்ஜ் மென்டோன்சா. அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர். போரிலிருந்து திரும்பிய அவர் உண்மையில், கிரேட்டாவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ரீட்டா பெட்ரி என்பவரைத் தேடித்தான் ஓடி வந்தார். ஆனால் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கிரேட்டாவுக்கும் முத்தமிட்டார்.
ரீட்டாவும், ஜார்ஜும் பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்தனர் என்பது சுவாரஸ்யமானது. இந்தப் புகைப்படம் தி கிஸ் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது. இந்தப் படத்தில் இருக்கும் பெண் யார் என்பது பல காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்தப் புகைப்படத்தை முதலில் லைப் பத்திரிகைதான் வெளியிட்டது. பின்னர் இது மீண்டும் பிரபலமானது. கடந்த 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதப் பதிப்பில் இந்த ஜோடி யார் என்ற கேள்வியுடன் மீண்டும் பரபரப்பு கிளம்பியது. பின்னர்தான் இது ஜார்ஜ், கிரேட்டா என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து கிரேட்டாவின் மகன் ஜோஷுவா பிரைட்மேன் கூறுகையில்,அது ஒரு சாதாரண சம்பவம்தான். ரொமான்ஸோ அல்லது வேறு எதுவுமோ அதில் இல்லை. இருவரும ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை. வெற்றி மகிழ்ச்சியில் எனது தாயாருக்கு முத்தமிட்டுள்ளார் ஜார்ஜ் என்றார் ஜோஷுவா.
கிரேட்டாவின் பெற்றோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இனப்படுகொலையில் சிக்கி உயிரிழந்தனர். அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு தப்பி வந்தார் கிரேட்டார். அங்கு செட்டிலானார். 2ம் உலகப் போரின் முடிவை பற்றிப் பேசும்போதெல்லாம் இவரது முத்தப் படமும் பேசப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
கிரேட்டாவின் கணவர் டாக்டர் மிஷா பிரைட்மேன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். 92 வயதான கிரேட்டா வயோதிகம் காரணமாக ரிச்மான்ட்டில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் அர்லிங்டன் தேசிய கல்லறைத் தோட்டத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications