காசாவில் ராணுவத்தை திரும்ப பெறுகிறது இஸ்ரேல்.. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு
காசா: காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றிருக்கிறது. இதன் மூலம், காசாவிலிருந்து தங்களது ராணுவத்தை வாபஸ் பெற இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்பதாக நேற்று அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, இன்று இஸ்ரேலும் ஒப்பந்தத்தை ஏற்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் நன்றி
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "இந்தத் திட்டத்தை நாங்கள் ஹமாஸுடன் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் ஒப்புதல் அளித்தவுடன், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். 3000 ஆண்டுகால இந்த பேரழிவை முடிவுக்குக் கொண்டுவரும் அடுத்தகட்டப் படைகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கான சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்குவோம்" என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர், காசா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர டிரம்பின் திட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து அரபு நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் டிரம்பின் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
ஆவலுடன் எதிர்பார்ப்பு
அந்த வீடியோவில், "இந்தத் திட்டத்தை உருவாக்க எனக்கு உதவிய நாடுகளான கத்தார், துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் பலவற்றிற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். பலர் கடுமையாகப் போராடினர். இது ஒரு பெரிய நாள். எல்லாம் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம். இறுதி முடிவை நாம் உறுதியாக எடுக்க வேண்டும். பணயக்கைதிகள் தங்கள் பெற்றோர்களுடன் வீடு திரும்புவதையும், சில பணயக்கைதிகள், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இருக்கும் நிலையை நீங்கள் அறிவீர்கள், அவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் திரும்புவதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமைதி திரும்ப வேண்டும்
அனைத்து நாடுகளும் காட்டிய ஒற்றுமையைப் பாராட்டிய டிரம்ப், இது முன்னெப்போதும் நடக்காத ஒன்று என்றும் குறிப்பிட்டார். "இப்படி நடப்பது இதுவே முதல்முறை. இதற்காக உதவிய அனைத்து பெரிய நாடுகளுக்கும் நன்றி. எங்களுக்கு மகத்தான உதவி கிடைத்தது. இந்த போர் முடிவடைய வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் அமைதி வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றுபட்டனர்" என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவலின்படி, எகிப்தில் நடைபெறும் இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழுவில், அமைச்சர் ரான் டெர்மெர், பணயக்கைதிகள் ஒருங்கிணைப்பாளர் கால் ஹிர்ஷ், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ஓஃபிர் ஃபால்க், ஷின் பெட் அதிகாரி "மெம்", மற்றும் மொசாட் அதிகாரி "டாலெட்" ஆகியோர் இடம்பெறுவார்கள்.
பேச்சுவார்த்தை எப்போது?
டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தின்படி, ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள பிற பயங்கரவாதக் குழுக்களால் பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும், இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் பிற பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவிப்பது குறித்து திங்கள்கிழமை எகிப்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடந்தி வருகிறது. இதில் 60,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications