சிறுபான்மையினரை ராஜபக்சே பாதுகாக்க அமெரிக்கா வலியுறுத்தல்!
நியூயார்க்: சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த 15ஆம் தேதி இலங்கையிலுள்ள ஆழுத்கமாவில் முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேலும் முஸ்லீம்களின் பல்வேறு கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது.

அமெரிக்கா கண்டனம்
இலங்கையில் நடைபெற்று வரும் இன ரீதியான மோதல்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதி நிலவ
குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து, வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் சாகி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு நாட்டை அமைதியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் கவலை
இஸ்லாமிய நாடுகளான ஈரான், கத்தார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதர்கள், கொழும்பிலுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

அமைச்சர் விளக்கம்
அப்போது, இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, 6 நாடுகளின் தூதர்களுக்கு, ரவூப் ஹக்கீம் விளக்கி கூறினார். மேலும், இந்த தாக்குதலின் பின்னணி குறித்தும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்தும், 'பொதுபல சேனா' என்கின்ற பெயரில் தீவிரவாத இயக்கத்தினரின் இந்த திட்டமிட்ட தாக்குதல்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிர் மற்றும் உடமை இழப்புகள் குறித்தும், தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்தார்.

முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு
இவற்றை மிகவும் கவனமாகக் கேட்ட தூதர்கள், இலங்கை வாழ் முஸ்லீம்களின் நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை கொண்டிருப்பதாகவும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பு
மேலும், இப்பிரச்னைகள் குறித்து தமது நாடுகளின் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும், 19ஆம் தேதி நடைபெறவுள்ள முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டிலும் இதுகுறித்து எடுத்துரைத்து, அதன் மூலம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.












Click it and Unblock the Notifications