ஒரே நொடி.. ரஷ்யாவில் இறங்கிய உக்ரைன் டிரோன்கள்.. எங்கு பார்த்தாலும் தீப்பிழம்பு! மிக பெரிய தாக்குதல்
டெல் அவிவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. மேலும், தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்கிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு தரப்பினரும் முயன்றாலும் கூட மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. டிரம்ப் கூட இதை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்தார். ஆனாலும், மோதல் முடிவுக்கு வந்தது போலத் தெரியவில்லை.

உக்ரைன் தாக்குதல்
சமீப காலங்களாக இரு நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் அங்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆலை, ரஷ்யாவின் பாஷ்னெஃப்ட் (Bashneft) நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இந்தத் தாக்குதலை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், பாதிப்புகள் தீவிரமாக இல்லை என்றும் சிறியளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏன் முக்கியம்
இந்தத் தாக்குதல் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது ரஷ்யா உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ஆலை இல்லை. மாறாக உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 1,400 கிலோமீட்டர் (870 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. மத்திய ரஷ்ய நகரமான உஃபா (Ufa) புறநகரில் இந்த ஆலை அமைந்துள்ளது. அந்தளவுக்கு ஊடுருவிச் சென்று உக்ரைன் டிரோன்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் ட்ரோன்கள் ஆலை நோக்கிச் செல்வதும் திடீரென பெரும் வெடிப்புகள் ஆலையில் நடப்பதும் பதிவாகியுள்ளது. அந்த ஆலையில் அடுத்தடுத்து டிரோன்கள் மோதி பெரும் வெடிப்புடன் தீப்பிழம்புகள் வெளியாவதும் அங்கு முழுக்க புகை மண்டலம் உருவாகி இருப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
ஊடுருவிய டிரோன்கள்
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்டான் பகுதியின் தலைவர் ரேடி காபிரோவ் என்பவரும் இந்தத் தாக்குதலை உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர், "இன்று, பாஷ்னெஃப்ட் ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு ட்ரோன் ஆலைக்குள் விழுந்தது, மற்றொரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. உற்பத்தி தளத்திற்குச் சிறிய சேதம் ஏற்பட்டதுடன், தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
காரணம் என்ன
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது முழு அளவிலான ராணுவத் தாக்குதலை ரஷ்யா தொடங்கியது. அதற்குப் பதிலடியாக உக்ரைனும் ரஷ்யா மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனை மூலம் நிதி திரட்டுவதால் அதை காலி செய்யும் வகையிலேயே சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதல்கள் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன்களைக் கடுமையாக பாதித்தன. இதனால் எரிபொருள் விலையும் கூட உயர்ந்தன. இப்போது உக்ரைன் தாக்கியுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இந்த ஆலை 150க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதாகவும் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications