கிளம்பிய பகீர் பூதம்.. பெண்களை பலாத்காரம் செய்யும் ரஷ்ய வீரர்கள்! உக்ரைன் அமைச்சர் குற்றச்சாட்டு
கீவ்: ‛‛ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்'' என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 10வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கெர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்ய படைகளுக்கு தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் துப்பாக்கி சண்டை நடக்கிறது.
மேலும் போரை முடித்து கொள்வது தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ரஷ்யாவின் கட்டுப்பாடுகளுக்கு உக்ரைன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு கிடைக்கவில்லை.

இனப்படுகொலை குற்றச்சாட்டு
இதனால் ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் உக்ரைனில், ரஷ்யா இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முன்வைத்தும், ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனக்கூறியும் உக்ரைன் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போர் குற்றம்
இது ஒருபுறம் இருக்க உக்ரைனில் ரஷ்ய படை வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக அதன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் தான் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யா தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார்.

பலாத்காரம்
அதாவது ரஷ்யாவின் படை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரங்களில் வசிக்கும் பெண்களிடம் அத்துமீறி பலாத்காரம் செய்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛நாட்டில் உள்ள நகரங்களில் குண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருகிறது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் ரஷ்ய ராணுவ வீரர்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக பல புகார்கள் உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் அனைவரும் நீதித்துறையின் முன் நிறுத்தப்படுவார்கள். தாய்நாட்டை காக்க எங்களை விட பலமாக உள்ளவர்களிடம் மோதி வருகிறோம். சர்வதேச சட்டம் எங்கள் பக்கம் தான் உள்ளது. இது எங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்'' என்றார்.
Recommended Video

ஆதாரங்கள் இல்லை
இருப்பினும் இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு அதுதொடர்பான எந்த ஆதாரங்களையும் அவர் வெளியிடவில்லை. இதற்கிடையே ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்காக சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் லண்டனில் உள்ள சாதம் ஹவுஸ் பிரதிநதிகளுடன் வீடியோ கான்பரன்ஸில் பேசியபோது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். சதாம் ஹவுஸ் என்பது லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமாகும். உலக நிகழ்வுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்களை வழங்கி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணியை இது மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications