சிவப்பு கம்பள வரவேற்பில் மேலாடையின்றி ஓடிய பெண்! கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு! பின்னணி இதுதான்
கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பின்போது திடீரென்று பெண் ஒருவர் மேலாடையின்றி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போர் நடவடிக்கையின்போது ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அவர் இத்தகைய செயலை செய்தது தெரியவந்துள்ளது.
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்தியாவில் இருந்தும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.

12 நாள் விழா
பிரான்ஸ் நாட்டில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 17 ல் துவங்கியது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவானது மே 28 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்கவும், அவர்களின் படம் திரையிடப்படுவதும் சிறந்த கவுரமாக பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நடிகர்கள் மாதவன், நவாசுதின் சித்திக் உள்பட ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலாடையின்றி ஓடிய பெண்
இந்நிலையில் நேற்று நடந்த விழாவில் பிற கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென்று பெண் ஒருவர் சிவப்பு கம்பள வரவேற்புக்கு நடுவே ஓடினார். அவர் மேலாடை அணியவில்லை. உக்ரைன் நாட்டின் தேசியக்கொடியின் நிறமான நீலம், மஞ்சள் நிறத்தில் ‛எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்' என உடலில் ஆங்கிலத்தில் ‛Stop Raping Us' எழுதியிருந்தார்.

ஆடையில் இருந்தது என்ன?
மேலும் அவர் தனது இடுப்பு பகுதியில் அணிந்திருந்த ஆடையில் ரத்தம், கைரேகைகளை குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் பூசப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவர் மீது துணியை போர்த்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பெண் யார்?. இவர் ஏன் இப்படி செய்தார்? என்ற கேள்வி எழுந்தது.

காரணம் என்ன?
இதுபற்றி விசாரித்தபோது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் நடவடிக்கை 3வது மாதத்தை தொட உள்ளது. இந்நிலையில் உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய வீரர்கள் அங்குள்ள சிறுமிகள் முதல் பெண்களை வயது வித்தியாசம் பாராமல் பலாத்காரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை உக்ரைன் நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, அமைச்சர்களும் கூறி கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் முன்னாள் காமெடி நடிகரான அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதனால் தான் அந்த பெண், உக்ரைனில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உலகறிய செய்யும் நோக்கத்தில் இப்படி செய்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications