1,100 கிலோ வெடி பொருள்.. கடலுக்கடியில் ரஷ்ய பாலத்தின் தூணை தகர்த்த உக்ரைன்! நடந்தது என்ன?
கீவ்: ரஷ்யாவையும், கிரிமியாவையும் இணைக்கும் பாலத்தில் சேதம் விளைவித்ததாக உக்ரைன் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. கடல் அடியில் பாலத்தின் தூணை வெடி வைத்து தகர்த்துள்ளது. அதிகாலை 4 முதல் 5 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலின் போது பதிவான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது. 1,100 கிலோகிராம் வெடிபொருட்களை பயன்படுத்தி சாலை மற்றும் ரயில் பாலத்தை குறி வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். கெர்ச் ஜலசந்தியில் உள்ள கிரிமியா பாலத்தின் தூண்கள் மீதே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இப்பாலம் ரஷ்யாவிற்கும், கிரிமியா தீபகற்பத்திற்கும் இடையேயான முக்கிய இணைப்புப் பாலமாக விளங்குகிறது.

ராணுவ தளவாடங்களை இந்த பாலத்தின் வழியேதான் ரஷ்யா கொண்டு சென்றது. தககுதலை தொடர்ந்து தற்காலிமாக பாலம் மூடபட்டு பின்னர் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, கிரிமியா பாலம் ரஷ்யாவின் ராணுவ வீரர்களுக்கு ஒரு முக்கியமான சப்ளை பாதையாகச் செயல்பட்டு வந்துள்ளது. ரஷ்ய படைகள் முதலில் இப்பாலத்தைப் பயன்படுத்தி கிரிமியாவிற்குள் நுழைந்தன.
அங்கிருந்து தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் ஸபோரிஜியா பகுதிகளுக்குச் சென்றனர். உக்ரைன் அமைப்பு வெளியிட்ட வீடியோவில், பாலத்தின் தூண்களில் ஒன்றின் அருகே வெடிப்பு ஏற்பட்டதை காணமுடிகிறது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஆவணப் படங்களுடன் ஒப்பிட்டு, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை தனிப்பட்ட முறையில் சரிபார்க்க இயலவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக இப்பாலம் கருதப்படுகிறது. இது கருங்கடல் மற்றும் அசோவ் கடலுக்கு இடையே கப்பல் போக்குவரத்திற்காக எஃகு வளைவுகளால் ஆன சாலை மற்றும் ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது. இப்பாலம் கான்கிரீட் தூண்களால் ஆனது.
SBU அமைப்பு பாலத்தை தாக்கியதாக தெரிவித்திருந்தாலும், தாக்குதல் தோல்வியடைந்திருக்கலாம் என ரஷ்ய ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதலில் கடல்சார் டிரோன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கிரிமியா பாலத்தின் மீதான இந்த தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
SBU மேலும் கூறுகையில், "2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் கிரிமியா பாலத்தின் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தினோம். அந்த வரிசையில், இந்த முறையும் கடலுக்கு அடியில் தாக்குதல் நடத்தியுள்ளோம்" என்று தெரிவித்தது. இந்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டது எனவும் அவர்கள் கூறினர்.
பாலத்தின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்ட ரஷ்ய அதிகாரிகள், உள்ளூர் நேரப்படி காலை 4 மணி முதல் காலை 7 மணி வரை பாலம் தற்காலிகமாக மூடப்பட்டதாகத் தெரிவித்தனர். பாலம் எதற்காக மூடப்பட்டது என்பதற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. தற்போது பாலம் மீண்டும் திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் நடத்திய மற்றொரு தாக்குதலில், ரஷ்யாவின் நீண்ட தூர போர் விமானங்களை குறிவைத்து டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த தாக்குதலுக்கு "சிலந்தி வலை" என்று பெயரிடப்பட்டது.
உக்ரைன் பாதுகாப்புப் படையினர் ரஷ்யாவுடன் இணைக்கும் கிரிமியா பாலத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு தாங்களே காரணம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் கடலுக்கு அடியில் வெடித்த ஒரு சம்பவத்தை நிகழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications