பாலஸ்தீனத்தில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் வரை ஆகலாம்! ஐநா கணிப்பு
காசா: பாலஸ்தீனத்தின் மீது கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் தொடுத்து வந்த போர் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், போரால் ஏற்பட்ட கழிவுகளை அகற்ற சுமார் 21 ஆண்டுகள் வரை ஆகும் என்று ஐநா கணித்திருக்கிறது.
இது குறித்து அல்-ஜசீரா செய்தி ஊடகம் கூறுகையில், "போரால் நொறுக்கப்பட்ட கட்டிடங்களின் குவியங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கில் சடலங்கள் இருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். நேற்று ராஃபாவில் மட்டும் 97 பேரின் சடலங்கள் கட்டிட குவியல்களிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

போர் காரணமாக 47,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 11,000க்கும் அதிகமாக இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இது தவிர கட்டிட இடிபாடுகளில் 10,000க்கும் அதிகமான உடல்கள் இருக்கலாம் என சந்தேதிக்கப்படுகிறது.
சுமார் 2840 பேரின் உடல்கள் வெடிகுண்டின் தீயில் உருகியிருக்கின்றன. அவர்களது உடல் இருப்பதற்கான அடையாளம் கூட இங்கு கிடைக்கவில்லை என்று காசாவின் சிவில் அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளரான முகமது பசல் கூறியிருக்கிறார். போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் தற்போது மீண்டும் தங்கள் குடியிருப்பு இருந்த பகுதிக்கு திரும்ப வர தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்திருக்கின்றன.
மக்கள் கூறுகையில், 'நாங்கள் எங்கள் சொந்தம் பந்தங்களை விட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்துக்கொண்டிருந்தோம். இப்போது வந்து பார்த்தபோது எங்களுக்கு என யாரும் இல்லை. வீடு, வாசல் என எதுவும் இல்லை. இங்கு நடந்தது நிலநடுக்கமோ, வெள்ள பாதிப்போ கிடையாது. ஒரு போர், அது எல்லாவற்றையும் அழித்துவிட்டது' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
காசா சுமார் 69 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றிருக்கிறது என ஐநாவின் வளர்ச்சி திட்டத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்போதிருக்கும் போர் குப்பைகளை அகற்ற 21 ஆண்டுகள் வரை ஆகலாம். குறைந்தபட்ச காலம் எனில், 2040ல்தான் ஓரளவு காசாவில் கட்டிடங்கள் மீண்டும் உயர்ந்து நிற்கும்" என்று தெரிவித்திருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி பாலஸ்தீனத்தின் விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. அதற்கு முன்னர் வரை தண்ணீர் கூட இஸ்ரேலிய ராணுவம் அனுமதித்தால்தான் காசாவுக்கு உள்ளே செல்லும் என்கிற நிலை இருந்தது. அப்படி இருக்கும்போது எங்களை மீறி எப்படி ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன என இஸ்ரேல் கடும் கோபம் கொண்டது. இதுதான் போருக்கான தொடக்கப்புள்ளி.
போர் உச்சகட்டத்தை தொட்டபோது, அதை நிறுத்த ரஷ்யாவும், சீனாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்யது. இப்படியாக போர் இந்த அளவுக்கு வளர அமெரிக்கா தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications