எபோலா பாதித்த ஐ.நா. அதிகாரி உயிரிழப்பு
பெர்லின்: எபோலாவால் பாதிக்கப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த ஐ.நா. அதிகாரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது வயது 56.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றிய ஐ.நா சுகாதாரக் குழுவின் அதிகாரியான லெயிஸீக் செயின்ட் ஜார்ஜ் என்பவருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் ஜெர்மனில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்தார். இவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவந்த மூன்றவாது எபோலா நோயாளியாவார்.

டெக்சாஸில் எபோலா:
இதனிடையே அமெரிக்காவின் டெக்சாஸ் நகரின் டலாஸில் எபோலாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரின் நாய்க்கும், எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனை அடுத்து அந்த நாய்க்கு எபோலா பாதிப்புக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாயை கொல்லமாட்டோம்
ஒருவேளை நாய்க்கு பாதிப்பு இருப்பது உறுதியானால், அதனை கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படாது என்று டலாஸ் ஆளுநர் மைக் ராவ்லிங் உறுதி அளித்துள்ளார்.
செல்லப்பிராணிகளுக்கு பரிசோதனை
இந்த அச்சத்தை தொடர்ந்து டெக்சாஸ் மாகாணத்தில் செல்லப் பிராணிகளுக்கு எபோலா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எபோலா பாதிப்பு ஏற்பட்டவர் மற்றும் அவரது நாய்க்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் குறித்த விவரம் வெளியிடப்படாமல் உள்ளது.












Click it and Unblock the Notifications