100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் 100 நாட்களுக்கும் மேலான ஏவுகணை அட்டாக், முக்கியத் தலைவர்களின் இழப்பு, பொருளாதாரத் தடைகள் எனப் பலமுனைத் தாக்குதல்களைச் சந்தித்த பிறகும் ஈரான் இன்னும் வீழாமல் நிற்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் எப்படி இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்கிறது? அதன் பொருளாதாரம் எப்படி இதையெல்லாம் சமாளிக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் ராணுவக் கட்டமைப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் குறிவைக்கப்பட்டனர். இதனால் ஈரானுக்கு சுமார் 347 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஈரானின் பொருளாதாரம் 6.1 சதவீதம் சுருங்கும் என்று ஐநா சபை கணித்துள்ளது.

US Israel Conflict

ஈரான் பொருளாதாரம்

இருப்பினும், ஈரான் முற்றிலும் முடங்கிவிடவில்லை. பல ஆண்டுகளாகவே ஈரான் பொருளாதாரம் தனித்து இருப்பதே அதற்குக் காரணமாகும். பல ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருவதால், ஈரான் சில மாற்று வழிகளைக் கையாண்டு வருகிறது.

அதாவது சர்வதேச தடைகள் இருந்தாலும் அதையும் தாண்டி ஈரான் தனது கச்சா எண்ணெய்யை விற்றே வருகிறது. சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, ஈரான் தனது எண்ணெய் கப்பல்களின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்துவிடுகிறது. நடுக் கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய்யை மாற்றி, ரகசியமாக விற்பனை செய்கிறது.

ஹார்முஸ்

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எரிபொருள் செல்லும் 'ஹார்முஸ் நீரிணையை' ஈரான் மூடியது. இது மற்ற நாடுகளைப் போலவே ஈரானையும் பாதிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், ஈரான் அதற்கு முன்பே அதிகப்படியான எண்ணெய்யை ஏற்றுமதி செய்து ஓரளவுக்கு நிதியைச் சேமித்து வைத்திருந்தது. கடல் வழி அடைக்கப்பட்டதால், ஈரான் தனது வடக்குத் துறைமுகங்கள் வழியாக ரஷ்யாவுடனும், ரயில் பாதை வழியாக மத்திய சீனாவுடனும் வர்த்தகத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனான வர்த்தகமும் ஈரானுக்குக் கைகொடுக்கிறது.

காரணம்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி 2013ல் அறிமுகப்படுத்திய பொருளாதார எதிர்ப்பு கொள்கை இப்போது அந்த நாட்டுக்கு உதவியாக இருக்கிறது. வெளிநாட்டு இறக்குமதியைக் குறைப்பது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் வெளிநாட்டுச் செலாவணியைப் பயன்படுத்துவது என்ற முறையைக் கையாண்டது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்காததால், ஈரான் நிறுவனங்களே பல பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கின. இது அந்த நாடு முற்றிலும் முடங்குவதைத் தடுத்தது.

சிக்கல்கள்

அதேநேரம் ஈரானுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை எனச் சொல்லிவிட முடியாது. ஈரான் அரசு தாக்குப்பிடித்தாலும், அந்நாட்டு மக்கள் கடும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்.. ஈரானின் பணவீக்கம் 77 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. அந்நாட்டு நாணயமான 'ரியால்' வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

சுமார் 41 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ரொக்கப் பணம் இல்லாததால், புத்தகம் வாங்குவது முதல் டாக்ஸி பயணம் வரை அனைத்திற்கும் இஎம்ஐ போன்ற தவணை திட்டங்களையே மக்கள் சார்ந்து இருக்கிறார்கள். இறைச்சி மற்றும் கோழி இறைச்சிக்குப் பதில் சோயா பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றம்

மக்கள் சிரமப்படுகிறார்.. அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்றால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை நாட்டின் அதிகாரத்தை இன்னும் பலமாகத் தன் கையில் வைத்துள்ளது முதல் காரணம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நேரடித் தாக்குதல்களால், ஈரான் மக்களிடையே அந்த நாடுகளுக்கு எதிரான கோபத்தை அதிகரித்துள்ளது. இது தற்காலிகமாக ஈரான் அரசுக்கு ஆதரவாக மாறியுள்ளது.

பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று ஈரானின் உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இவற்றை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 300 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஈரானின் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பப் பல ஆண்டுகள் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+