போர் பதற்றம்... உக்ரைனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கெர்ரி பயணம்
வாஷிங்டன்: போர் பதற்றம் அதிகரித்து இருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி விரைந்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ரஷியா ஆதரவு உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் பதவி விலகியதால் அங்கு பெரும் போராட்டங்கள் தொடங்கின.
இதன் பின்னர் யனுகோவிச் ரஷியாவில் அடைக்கலமானார். தொடந்து உக்ரைனில் இடைக்காலப் பிரதமராக துர்ஷிநோவ் பதவியேற்றார். எதிர்க்கட்சித் தலைவர்கள் புதிய தேர்தல் குறித்தும் பொருளாதார சீரமைப்புக் குறித்தும் ஆலோசனையில் இறங்கினர்.
இந்த நிலையில் உக்ரைனின் கிரிமியா பகுதியில் உள்ள தத்தார் சமூகத்தின் ஆயுதமேந்திய குழுவினர் அரசுக் கட்டிடங்களை முற்றுகையிட்டனர். அங்கு தொடர்ந்த கலவரங்களை அடக்க அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் மீறி ரஷ்யா தனது படைகளை அனுப்பியுள்ளது.
இதன் விளைவாக வரும் ஜூன் மாதம் சோச்சி நகரில் நடைபெற உள்ள ஜி 8 உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளைத் ஒத்தி வைக்குமாறு பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உக்ரைனிலிருந்து தனது படைகளை வெளியேற்ற ரஷியாவுக்குக் கெடு விதித்துள்ளனர். இல்லையெனில் விசா தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் போன்றவை நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவும் பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என்று எச்சரித்தது. இந்நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தமது ஆதரவை புதிய அரசுக்கு வெளிப்படுத்த அங்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதே நேரத்தில் யனுகோவிச்சை பதவியில் இருந்து அகற்றியது உக்ரைன் அரசியல் சாசனப்படி விரோதமானது என்று மீண்டும் ரஷியா அதிபர் புதின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications