என் பூனை தான் எனக்கு மட்டும் தான்... மறுபிறவி எடுத்த பூனைக்காக கோர்ட்டில் சண்டை
புளோரிடா: அமெரிக்காவில் விபத்து ஒன்றில் சிக்கி மறுபிறவி எடுத்த பூனை ஒன்றிற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா பே என்ற இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பூனை ஒன்று கார் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்து மயங்கிய அந்த பூனையை, இறந்துவிட்டதாகக் கருதிய அதன் உரிமையாளர் அதனை புதைத்துவிட்டார்.
ஆனால், 5 நாட்கள் கழித்து அதிசயமாக அந்த பூனைக்கு உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை புதைகுழியில் இருந்து மீட்ட தொண்டு நிறுவனம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது.
தீவிர சிகிச்சைக்குப் பின் பூரண குணம் அடைந்தது பூனை. இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இணையம் வாயிலாக தனது பூனை உயிரோடு இருப்பதை அறிந்தார் அதன் உரிமையாளர். தன்னுடைய பூனையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், பூனையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அதன் உயிரைக் காப்பாற்றிய தொண்டு நிறுவனமோ அந்தப் பூனையைத் திருப்பித் தர மறுத்து விட்டது.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications