ஓவர் நைட்டில் 4 கிராம மக்கள் பலி.. குழந்தை முதல் பெரியவர்வரை ஒரே மாதிரி உயிரிழந்த மர்மம்! என்ன நடந்தது
கேமரூன்: ஒரு நாள் காலையில் கிட்டத்தட்ட நான்கு கிராமங்களில் இருக்கும் மக்கள், விலங்குகள் என அனைவருமே உயிரிழந்து கிடந்தனர்.. ஓவர்நைட்டில் 1700 பேர், 3500 விலங்குகள் மூச்சு திணறி உயிரிழந்தன. இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ஒரே மாதிரி உயிரிழந்தது உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
இயற்கை பேரழிவுகளை நாம் எப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாம் எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அதையும் தாண்டி மிக மோசமான பேரழிவுகள் ஏற்படும் என்பதைக் காட்டும் சம்பவம் தான் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் என்ற பகுதியில் நடந்துள்ளது. அங்குச் சரியாக 39 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. அங்கிருந்த நியோஸ் ஏரியில் மிக மோசமான இயற்கை பேரழிவு ஏற்பட்டது.

மிக மோசமான பேரழிவு
அதாவது 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி அதிகாலையில் ஒட்டுமொத்தக் கிராமமும் உயிரிழந்தது. நியோஸ் ஏரிக்கு அருகே அமைந்துள்ள அந்தக் கிராமத்தில் இருந்த அனைவருமே ஓவர்நைட்டில் உயிரிழந்தனர். அங்கிருந்த 1700 மனிதர்கள், 3500 விலங்குகள் என்று கிட்டத்தட்ட எல்லாருமே உயிரிழந்தனர். வயதானவர்கள், இளைஞர்கள், பெண்கள், அவ்வளவு ஏன் குழந்தைகள் என அனைவருமே உயிரிழந்தனர்.
இப்படி ஓவர்நைட்டில் ஒட்டுமொத்தக் கிராமும் உயிரிழந்தது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது எப்படி நடந்தது.. இதற்கு என்ன காரணம் என்பது புரியாமல் பலரும் குழம்பினர். இடையில் பேய், பிசாசு எனப் பல கட்டுக்கதைகளும் கூட பரவ ஆரம்பித்தன. ஆனால், ஆய்வாளர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்திய போது, மிகவும் வினோதமான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தனர்.
என்ன காரணம்
அதாவது அன்றைய தினம் இரவு நியோஸ் ஏரியில் திடீரென ஏற்பட்ட லிம்னிக் வெடிப்பே இதற்குக் காரணமாம். இந்த வெடிப்பால் ஏரியில் இருந்து அதீத கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயு வெளியேறியது. காற்றை விட அடர்த்தியான இந்த வாயு, அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் கால்நடைகளை மூச்சுத்திணறச் செய்து கொன்று இருக்கிறது. இதுவே பல ஆயிரம் பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. நியோஸ் ஏரி பேரழிவுக்கு என்ன காரணம்? ஆபத்தான லிம்னிக் வெடிப்பின் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
லிம்னிக் வெடிப்பு
லிம்னிக் வெடிப்பு என்று அழைக்கப்படும் ஒரு அரிய இயற்கை நிகழ்வே இதற்குக் காரணமாகும். ஆழமான ஏரி நீரில் அளவுக்கு அதிகமாக வாயு, குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு வாயு, நிரம்பியிருக்கும் போது இது நிகழ்கின்றன. நியோஸ் ஏரியில் பல ஆண்டுகளாக அந்த கார்பன் டை ஆக்சைடு சேர்ந்து, நீருக்கு அடியில் இருந்துள்ளது. அப்போது ஏற்பட்ட சிறு இயற்கை நிகழ்வு லிம்னிக் வெடிப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. அதாவது சிறிய நிலச்சரிவு அல்லது சிறிய எரிமலை செயல்பாடு அல்லது அசாதாரணக் கனமழை அங்கிருந்த கார்பன் டை ஆக்சைடு பரவ காரணமாக இருந்துள்ளது.
மூச்சுத் திணறல்
அடர்த்தியான கார்பன் டை ஆக்சைடு மேகம் போல மாறி, சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பரவியுள்ளது. கார்பன் டை ஆக்சைடு கனமாக இருக்கும் என்பதால் அதுதான் கீழே இருக்கும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை உயரத்திற்குத் தள்ளிவிடும். இதன் காரணமாகவே சுற்றிருந்த கிராமங்களைச் சேர்ந்த அனைத்து உயிரினங்களும் மூச்சு திணறி உயிரிழந்தன.
தப்பிக்கக் கூட முடியல
மணிக்கு 20-50 கிலோமீட்டர் வேகத்தில் அது பரவிய சூழலில், இரவு நேரம் என்பதால் மக்களால் தப்பித்துக் கூட போக முடியவில்லையாம். நியோஸ், காம், சா மற்றும் சுபம் எனப் பல கிராம மக்கள் உயிரிழந்தனர்.. சிலர் உயிர் பிழைத்தாலும் கூட அவர்களுக்குப் பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய்கள் ஏற்பட்டது.
மேலும், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது ஏரியின் குழாய் செலுத்தப்பட்டது. கார்பன் டை ஆக்சைடு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மெதுவாக வெளியேற்றப்படுகிறது. பாதுகாப்பை அதிகரிக்க 2011இல் இரண்டு கூடுதல் குழாய்கள் நிறுவப்பட்டன. இதன் மூலம் மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications