எரியும் நெருப்பில் எண்ணெய்.. அப்படி என்ன செய்தது இஸ்ரேல்? பாலஸ்தீனின் ஹமாஸை கோபப்படுத்தியது எது?
ஜெருசலேம்: பாலஸ்தீன் - இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தும் அளவுக்கு இஸ்ரேல் என்ன செய்தது? விரிவாக பார்ப்போம்.
அரபு தீபகர்பத்தில் அமைந்து இருக்கும் நாடான பாலஸ்தீனின் காசா, மேற்கு கரை ஆகிய பகுதிகளை ஆக்கிரமிக்க அந்நாட்டின் மீது தொடர்ந்து பல ஆண்டுகளாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்து தாக்கியதாகவும், ஜெருசலேமில் உள்ள அக்சா மசூதிக்கு செல்ல முயன்றவர்களை அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக பாலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன் மக்கள், பெண்கள், குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள். புனித அக்சா மசூதிக்கு ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை காலங்களில் தொழுகை நடத்த செல்லும் பாலஸ்தீனர்கள் மீது போலீஸ், ராணுவத்தை ஏவி இஸ்ரே தாக்குதல் நடத்துவதும் வழக்கம்.
இந்த நிலையில், அக்சா மசூதிக்கும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த இஸ்ரேல் தடை விதித்து இருப்பதால் பதற்ற நிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இதற்கிடையே கடந்த வாரம் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் அக்சா மசூதிக்கு சென்றபோது இஸ்ரேலிய மக்கள் மற்றும் போலீஸ் படைகள் காலணிகளுடன் நுழைந்தன.
அதேபோல், அங்கு உள்ள இஸ்லாமிய தலைவர்களின் கல்லரைகளை பாலஸ்தீன் படைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஜோர்டான், பாலஸ்தீன் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில்தான் நேற்று திடீரென இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீனிலிருந்து ராக்கெட்டுகள் பாய்ந்து உள்ளன.
பாலஸ்தீனின் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலை ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள், விமான நிலையங்களை நோக்கி 5000 க்கும் அதிகமான ஏவுகணைகள் பாய்ந்தன. இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. Operation Al-Aqsa Flood என்ற பெயரில் ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலால் இஸ்ரேல் திக்குமுக்காடியது.
ஹமாஸ் அமைப்பின் ராணுவ தலைவராக இருக்கும் முஹம்மது தெய்ப், "அல் அக்சா மசூதியை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். இஸ்லாமிய இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் எதிரியை எச்சரித்தோம். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் இறங்கியது. யாரெல்லாம் துப்பாக்கி வைத்து உள்ளீர்களோ அவர்கள் அதை வெளியில் எடுங்கள். இது நமக்கான நேரம்." என்று அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து இஸ்ரேலும் போர் பிரகடனத்தை அறிவித்தது. உடனடியாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாலஸ்தீனை சேர்ந்த 240 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தாக்குதல்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் - பாலஸ்தீன் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications