"திடீரென பாய்ந்த ஏவுகணை!" மேற்கு கரையில் உள்ள மசூதி வளாகத்தில் இஸ்ரேல் தாக்குதல்! உச்சக்கட்ட பதற்றம்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், திடீரென மேற்கு கரையில் உள்ள மசூதி வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைகளுக்கும் இடையே கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாகத் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. காசாவில் தான் இந்த தாக்குதல் மோசமாக நடந்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும், காசாவுக்கு அருகே பெரிய ராணுவ தளங்களை அமைத்துள்ள இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. வரும் காலத்தில் இந்த போர் மேலும் மோசமடையும் என்றே அஞ்சப்படுகிறது.
காசா: காசாவில் தீவிரமாகத் தாக்குதல்கள் நடத்தி வந்த நிலையில், இப்போது இஸ்ரேல் மேற்கு கரையிலும் தாக்குதலை நடத்தியுள்ளது. அதற்கு முன்பு காசா, மேற்கு கரை இரண்டும் எங்கே இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த தாக்குதல் ஏன் ஆபத்தானது என்பது நமக்குப் புரியும்.
அங்குக் காசா மற்றும் மேற்குக் கரை என்று இரண்டு பாலஸ்தீன பகுதிகள் இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் சேர்த்து 50 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இருக்கிறார்கள். இஸ்ரேலின் தென்மேற்கு மூலையில் மத்தியதரைக்கடலின் கரையோரத்தில் காசா பகுதி அமைந்துள்ளது. இது தெற்கே எகிப்துடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
மேற்கு கரை: அதேநேரம் மேற்குக் கரை என்பது இஸ்ரேல் அருகே அமைந்துள்ள மற்றொரு நிலப்பரப்பாகும். இது காசா பகுதியை விட பெரியது. மேற்குக் கரையானது இஸ்ரேலின் கிழக்கே ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ளது. இதன் காரணமாகவே இந்த பகுதி நேற்று கரை என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பாலஸ்தீன பகுதிகளையும் பிரிக்கும் பிராந்தியம் முழுக்க இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இத்தனை காலம் மத்தியதரைக்கடல் பகுதி அருகே அமைந்துள்ள காசா பகுதியில் தான் தாக்குதல் நடந்து வந்தது. அங்கே தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகச் சண்டை தொடர்ந்து வந்த நிலையில், இப்போது இஸ்ரேல் மேற்கு கரையிலும் தாக்குதலை நடத்தியுள்ளது. இது அங்கே நிலைமையை மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மசூதி வளாகம்: மேற்குக் கரையில் அமைந்துள்ள அல்-அன்சார் மசூதி வளாகத்தில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. அங்கே மசூதிக்கு அருகே அடியில் அமைந்துள்ள ரகசிய வளாகத்தைப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே அங்கே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இந்த வளாகத்தை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயன்படுத்துகிறதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது.
இந்த மசூதியின் கீழ் உள்ள ஒரு பதுங்கு குழியின் நுழைவாயிலைக் குறிப்பிடும் வகையிலான படம் ஒன்றையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது. மேலும், அங்கே பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறி அது தொடர்பான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சம்: ஹமாஸ் உடனான மோதல் ஆரம்பித்த பிறகு.. மேற்கு கரையிலும் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் இதுவரை 84 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாரங்களில் இதற்கு முன்பும் மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போதிலும், அங்குள்ள மசூதியில் தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரிப்பதாக அமைகிறது. இதனால் அடுத்துப் போர் மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications