பூமி அழியும் தேதி இதுதான்.. துல்லியமாக கணித்து சொன்ன ஆய்வாளர்கள்! சீக்கிரமே நெருங்கும் பேரழிவு
டோக்கியோ: பூமி எப்போது அழியும் என்ற கேள்விக்குப் பலரும் விடை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். சிலர் ஆன்மீக வழியிலும் சிலர் அறிவியல்பூர்வமாகவும் அதற்கு முயல்கிறார்கள். இதற்கிடையே ஜப்பான் ஆய்வாளர்கள் இது குறித்த ஒரு துல்லியமான கணிப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக எந்தவொரு விஷயம் தோன்றினாலும் அதற்கு அழிவு என்பது இருக்கும். எந்தவொரு விஷயமும் இதில் விதிவிலக்காக இருக்காது. பூமியும் அப்படி தான். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியும் நிச்சயம் அழியும். அது எப்போது நடக்கும் என்பதே பலருக்குமான கேள்வி. இந்த கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறார்கள். இதற்கிடையே ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு வழியாக அதற்கு விடையைக் கண்டுபிடித்துவிட்டனர்.

ஜப்பான் ஆய்வாளர்கள்
இவர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முறையைச் சோதித்துள்ளனர். அதில் பூமியின் ஆக்சிஜன் சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் காலியாகிவிடும் எனத் தெரிவித்துள்ளனர். அப்படி ஆக்சிஜன் அனைத்தும் காலியானால் அதன் பிறகு உயிர்வாழ்வதே சாத்தியமற்றதாக மாறிவிடும் எனக் கணித்துள்ளனர். பூமியில் வரும் காலங்களில் என்ன மாதிரியான பரிணாம வளர்ச்சி ஏற்படும் என்பதைக் கணித்து சுமார் 4 லட்சம் முறை வெவ்வேறு மாடல்களை ரன் செய்த பிறகே இந்த கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
எப்போது அழியும்
சூரியன் வயதாக வயதாக அது வெப்பமாகவும் பிரகாசமாகவும் மாறும்.. இது பூமியின் காலநிலையையும் பாதிக்கும். பூமியின் பெரும்பகுதி நீரால் சூழ்ந்துள்ள நிலையில், அவை பெருமளவு ஆவியாகும்.. இதனால் பூமியின் வெப்பநிலை உயரும்.. கார்பன் சைக்கிள் பலவீனமடையும்.. இதனால் தாவரங்கள் அதிகம் உயிரிழக்கும் என்பதால் ஆக்சிஜன் உற்பத்தியும் குறையும். இதனால் மீத்தேன் அதிகரிக்கும்.. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளிமண்டலம் மீத்தேன் அதிகளவில் இருந்ததே. அதே நிலை மீண்டும் ஏற்படும். கிரேட் ஆக்சிஜனேற்ற நிகழ்வுக்கு முந்தைய பூமியைப் போன்ற ஒரு சூழல் ஏற்படும் என்று கணித்துள்ளனர்.
இது குறித்த ஆய்வு "பூமியின் வளிமண்டலத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் நேச்சர் ஜியோசைன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தான் பூமியில் மனிதர்கள் வாழத் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் 1 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக ஜப்பானின் டோக்கியோவில் உள்ள டோஹோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கசுமி ஓசாகி கூறுகையில், "சூரியன் மற்றும் கார்பனேட்-சிலிகேட் சுழற்சி எப்படி இருக்கிறது என்பதை வைத்தே பல ஆண்டுகளாக பூமியின் எதிர்காலம் குறித்து விவாதித்து வருகிறோம். அதில் நாம் முக்கியமாகக் கவனிப்பது வளிமண்டலத்தில் உள்ள CO2 அளவு தொடர்ந்து குறைவதும்.. பூமி தொடர்ச்சியாக வெப்ப மயமாவதும் ஆகும்.
அதிக வெப்பம் காரணமாக ஒளிச்சேர்க்கை (photosynthesis) பாதிக்கப்படும். அதேபோல வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறையும். இதனால் பூமியின் பயோஸ்பியர் 2 பில்லியன் ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவுகளும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். பூமியில் ஆக்சிஜன் அளவுக்குக் குறையும்போதும் உயிர்கள் வாழ முடியும் என்ற போதும் அதில் தற்போதைய நிலையில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும்" என்றார்.
முந்தைய கணிப்பை விடச் சீக்கிரம் நடக்கும்
அதேநேரம் அதிக வெப்பம் மற்றும் CO2 பற்றாக்குறை காரணமாகப் பூமி இரண்டு பில்லியன் ஆண்டுகளில் அழியும் என முதலில் கூறப்பட்ட நிலையில், இந்த ஆய்வில் பூமியின் அழிவு ஒரு பில்லியன் ஆண்டுகளில் நிகழக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் சூரியன் வயதாகும் போது, அது அதீத வெப்பமானதாக மாறும்.. இதனால் ஆக்சிஜன் குறையும். இதனால் பூமி ஒரு பில்லியன் ஆண்டுகளில் அழியும் எனக் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications