தாய்லாந்தில் உயர்கல்வி... கட்சியில் இணைந்து 7 ஆண்டுகள்... யார் இந்த பிரியங்கா திப்ரிவால்..?
கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரியங்கா திப்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
வழக்கறிஞராக உள்ள இவர், முன்னாள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் வலியுறுத்தலால் கடந்த 2014-ம் ஆண்டு தான் பாஜக வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மம்தாவை எதிர்க்கும் பிரியங்கா திப்ரிவால் குறித்த பின்னணியை இங்கு பார்க்கலாம்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்களில் பிரியங்கா திப்ரிவால் மிகவும் பிரசித்தி பெற்றவர். நீதிமன்றங்களில் ஆனித்தரமான வாதங்களை சட்டநுனுக்கங்களுடன் முன்வைத்து அனைவரையும் அசர வைக்கக்கூடியவர். பபுல் சுப்ரியோ மத்திய அமைச்சராக இருந்த போது அவரது சட்ட ஆலோசகராக பணியாற்றிய இவர், கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். வழக்கறிஞர் தொழிலை மட்டும் கவனிக்க நினைத்த இவரை பபுல் சுப்ரியோ தான் பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தினார்.

சட்ட உதவி
அதன் படி கட்சியில் இணைந்த இவர், இப்போது மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணியின் துணைத் தலைவராக உள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அரசுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை தொடர்ந்து அதன் மூலம் தேசியத் தலைமையின் கவனத்தையும் ஈர்த்தார். மம்தா அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் இவர், மேற்கு வங்க பாஜகவினருக்காக சட்ட உதவிகளை இலவசமாக செய்து கொடுத்து வருகிறார்.

தாய்லாந்து
டெல்லியிலும், தாய்லாந்திலும் உயர்கல்வி படிப்பை முடித்த இவர், கல்லூரிக் காலத்திலேயே தி டெலிகிராப் உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுத தொடங்கினார். அரசியலுக்கு மூலதனமே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் தான். இவை இரண்டும் இவரிடம் நிறையவே உள்ளதால் மேற்கு வங்க பாஜகவில் முக்கிய தலைவராக உருவெடுத்து வருகிறார். இதனிடையே வரும் 30-ம் தேதி நடைபெறும் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவதால், அவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம் என அமித்ஷா உள்ளிட்ட மேல்மட்டத்தலைவர்கள் ஆலோசனை நடத்தி அதில் பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநகராட்சி தேர்தல்
கடந்த 2015-ம் ஆண்டு கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதேபோல் அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்தார். பவானிபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாததை அடுத்து அங்கு மம்தா Vs பிரியங்கா திப்ரிவால் என்ற இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தொண்டர்கள்
பிரியங்கா திப்ரிவாலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் பவானிபூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவருக்கு வாக்குக்கோரி பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலரும் அங்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்வர் 5-ம் தேதிக்கு முன் மம்தா பானர்ஜி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல் நாடு தழுவிய அளவில் முக்கியத்துடம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications