"ரொம்பவே முக்கியம்." நேபாள எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல்.. உற்று கவனிக்கும் இந்தியா
காத்மாண்டு: மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை நமது அண்டை நாடான நேபாளம் சந்தித்து வரும் நிலையில், இப்போது அங்குத் தேர்தல் நடக்க உள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் தேசிய மற்றும் மாகாணத் தேர்தல்கள் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது. நேபாளம் இப்போது பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்குத் திருப்தி இல்லை என்ற போதிலும், எதிர்த் தரப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வலுவான கூட்டணியை அமைக்கத் தவறியுள்ளதால் அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினம்.

நேபாளம்
நேபாள நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 உறுப்பினர்களும் ஏழு மாகாண சபைகளின் 330 உறுப்பினர்களும் உள்ளனர். அதிக வாக்கைப் பெறுபவர்கள் வெற்றி, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என இரு முறைகளிலும் இந்த இடங்கள் நிரப்பப்படும். சுமார் 1.8 கோடி வாக்காளர்கள் இந்த நேபாள தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் எதிரொலிக்கும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

இக்கட்டான பொருளாதாரம்
ரஷ்யா உக்ரைன் போர் என்பது அந்த இரு நாடுகளை மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளையும் மிகக் கடுமையாகப் பாதித்து உள்ளது. இதில் நேபாளமும் விதி விலக்கு இல்லை. உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அங்குப் பணவீக்கம் 8 சதவீகித்தற்கு மேல் உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து நேபாளம் மெல்ல மீண்ட நிலையில், இந்த போர் நிலைமையை மோசமாக்கியது.

விலைவாசி உயர்வு
3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நேபாளத்தில், ஐந்தில் ஒரு ஒருவருக்குத் தினசரி 2 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு 5.84% வளர்ச்சியடைந்த நேபாள பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 5.1% வளர்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் அரசியல்வாதிகளுக்கே இந்த முறை நேபாள மக்களின் ஆதரவு இருக்கும்.

முக்கிய கட்சிகள்
அரசியல் ஸ்திரத்தன்மை தான் அங்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. அங்குக் கடந்த 2008இல் முடியாட்சி அகற்றப்பட்ட நிலையில், 15 ஆண்டுகளில் அங்கு 10 வெவ்வேறு அரசுகள் அமைந்துள்ளன. அங்கு நேபாளி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் யூனிஃபைட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (யுஎம்எல்) கட்சி மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் ஆகியவை மூன்று முக்கிய கட்சிகளாகும். இவை பல்வேறு கூட்டணிகளை அமைத்த போதிலும், எந்தவொரு கூட்டணியும் ஐந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்யவில்லை.

பிரதமர் திட்டம்
இதுவே முதலீட்டாளர்கள் நேபாளத்தில் இருந்து தள்ளி இருக்கக் காரணமாக உள்ளது. இந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கும், யுஎம்எல் கட்சிக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. நேபாளி காங்கிரஸ் கட்சி தான் இப்போது ஆளும் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்குகிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஷேர் பகதூர் தியூபா விரும்புகிறார்.

எதிர்க்கட்சிகள்
எதிர்த்தரப்பில் உள்ள 70 வயதான கே.பி. ஷர்மா ஒளி தலைமையிலான யுஎம்எல் கட்சியும் தேர்தலில் வெல்ல முனைப்புக் காட்டுகிறது. இவர் இரு முறை பிரதமராக இருந்துள்ள நிலையில், 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறார். ஷர்மா ஒளி கடந்த காலங்களில் சீனாவுக்கு ஆதரவாகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் மாவோயிஸ்ட் மையக் கட்சி கிங் மேக்கராக மாறுவார்.

இந்தியா
இந்த தேர்தல் நேபாளத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் முக்கியம். சீனா உடனான உறவு நமக்கு மோசமாக உள்ள நிலையில், நேபாளம் சீன ஆதரவாக இருக்கக் கூடாது என்பதை இந்தியா விரும்பும். எனவே, இந்தத் தேர்தலை நேபாள மக்கள் மட்டுமின்றி இந்தியாவும் சீனாவும் கூட கூர்ந்து கவனித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications