வெடிக்கும் உலக போர்? இஸ்ரேல் போரில் உள்ளே வரும் அமெரிக்கா.. எச்சரிக்கும் ஈரான்! அலறும் உலக நாடுகள்
தெஹ்ரான்: இஸ்ரேல்- ஹமாஸ் போர் ஒரு வாரத்தைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், இதில் அமெரிக்கா ராணுவ ரீதியில் தலையிட்டுள்ளதாகப் பரபர குற்றச்சாட்டை ஈரான் முன்வைத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைக்கு இடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக யுத்தம் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படை திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே சண்டை தொடர்கிறது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் காசா பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவுக்குள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் படையெடுத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் போர்: இதற்கிடையே இந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் எங்கு அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அரபு நாடுகள் ஹமாஸ் படைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் உலக வல்லரசான அமெரிக்கா எப்போதும் போல இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் எங்குப் போர் மேலும் விரிவடையுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது ஈரான் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காசாவில் இஸ்ரேலின் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தால், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களையும் யாராலும் தடுக்க முடியாது என்று ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கமேனி கூறுகையில், "பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்தால், உலகெங்கும் இருக்கும் முஸ்லிம்கள் ஒன்றிணைவார்கள். அப்போது அதை யாராலும் எதிர்கொள்ள முடியாது... காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றார்.
அமெரிக்கா தலையீடு: இதற்கிடையே இஸ்ரேல் ஈரான் இந்த விவகாரத்தில் மற்றொரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா ஏற்கனவே தலையிட்டுவிட்டதாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதை நாம் சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்தார்.
அமெரிக்கா இந்தப் போரில் தலையிட்டால் ஈரானும் தலையிடுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, "இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா ஏற்கனவே ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளதாகவே ஈரான் கருதுகிறது. இஸ்ரேலால் அரங்கேற்றப்படும் இந்த கொடூர குற்றங்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் தான் நடத்தப்படுகின்றன. இதற்கு அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.
போர்க்கப்பல்: இந்தப் போர் ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஏற்கனவே உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலை அமெரிக்கா கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பிவிட்டது.
அதேபோல மற்றொரு விமானம் தாங்கி போர்க் கப்பலையும் அப்பகுதிக்கு விரைவில் அமெரிக்கா அனுப்ப உள்ளது. இதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதி செய்துள்ளார். பதற்றத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைதியை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அச்சம்: இந்தப் போர் அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் தான் இப்போது உலக நாடுகளுக்கு இருக்கிறது. இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால் பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகள் தலையிடும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஹமாஸை முற்றிலுமாக அளிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதற்குப் பதிலடியாக ஈரான் இப்படிக் கூறியிருந்தது.
இப்படி இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே நடக்கும் போரில் நாளுக்கு நாள் உலக நாடுகளின் தலையீடுகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் எங்கே இது அடுத்த உலகப் போரை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications