சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பொங்கி எழும் மக்கள்.. கிளம்பிய போராட்டம்! கவனிக்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: நமது அண்டை நாடான சீனாவில் திடீரென ஜி ஜின்பிங்கிற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நமது அண்டை நாடான சீனாவில் கடந்த பல ஆண்டுகளாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. அங்கு மாற்றுக் கட்சிகளும் இல்லை. தேர்தல் முறையும் இல்லை.
இதனால் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆட்சி அமைத்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால் அங்குப் போராட்டம் தொடங்கி எதுவுமே நடைபெறாது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி
இதனிடையே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அங்கு நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த மாநாடு பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இதில் தான் சீனாவின் அதிபராக யார் இருப்பார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஏற்கனவே 2013ஆம் ஆண்டு முதல் சீன அதிபர் பதவியில் இருக்கும் ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் இருக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஜி ஜின்பிங்
அதற்கேற்ப அவர் காய்களை நகர்த்தி வருகிறார். கட்சிக்குள் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட ஜி ஜின்பிங், முக்கிய பதவிகளைத் தனது ஆதரவாளர்களைக் கொண்டே நிரப்பினார். மேலும், தன்னை எதிர்ப்பவர்களை ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி மெல்லக் களைந்துவிட்டார். தற்போதைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக யாருமே இல்லை என்றே கூடச் சொல்லலாம்.

பேனர்
இந்தச் சூழலில், பொதுமக்களிடையே ஜி ஜின்பிங்கிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். இதை வலியுறுத்தி நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளது. ஒரு பேனரில், கொரோனா டெஸ்டிங், ஊரடங்கு, பொய்கள், கலாசார புரட்சி எங்களுக்குத் தேவையில்லை மாறாக உணவு, சுதந்திரம், கண்ணியம், சீர்திருத்தம் ஆகியவை தான் தேவை என்று குறிப்பிட்டு உள்ளனர்.

போராட்டம்
மற்றொரு பேனரில் "சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி ஜின்பிங்கை அகற்றுங்கள்" என்று இருக்கிறது. அந்த பேனர்களை வைத்தது யார் என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல ஜி ஜின்பிங் எதிராக மக்கள் போராட்டத்திலும் குதித்து உள்ளனர். சீனாவில் பொதுமக்கள் பலரும் ஒரே இடத்தில் கூடி போராட்டம் நடத்தி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அரிது
ஏனென்றால் சீனாவில் போராட்டம் என்பதே மிகவும் அரிதான ஒன்று! அதிலும் இதுபோன்ற உயர்மட்ட மீட்டிங் நடைபெறும் போது, அங்கு உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அதையும் தாண்டி திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போராட்டம் தொடராமலும் பிற இடங்களுக்குப் பரவாமலும் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிபர் பதவி
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு சீனாவின் முக்கிய அரசியல் நிகழ்வாகும். நாளை மறுநாள் தொடங்கும் 20ஆவது மாநாட்டில் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுக்க அதிபராக இருக்கும் சட்டத் திருத்தத்தை ஜி ஜின்பிங் கொண்டு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஜி ஜின்பிங் அங்கு வலிமையான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

எதிர்ப்பு
உலகின் மற்ற அனைத்து நாடுகளும் கொரோனாவுடன் இணைந்து வாழப் பழகிக் கொண்ட போதிலும், சீனா இன்னும் கூட ஜீரோ கோவிட் கொள்கையைத் தான் பின்பற்றுகிறது. கொரோனா இருக்கும் இடங்களில் மிகக் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு எல்லாம் காரணம் ஜி ஜின்பிங் தான் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications