11 மணி நேரம் நடுக்கடலில் காக்க வைத்தது ஏன்? ஈரான் போர் கப்பலை அழித்த அமெரிக்கா.. இலங்கை எம்பி கேள்வி
கொழும்பு: இந்தியாவில் போர்ப் பயிற்சிக்காக வந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்தது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கிடையே அந்த கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வர உரிய நேரத்தில் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தியது ஏன் என்று இலங்கை எம்பி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானைச் சேர்ந்த ஒரு போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்தது. இந்தியக் கடற்படை சார்பில் நடத்தப்பட்ட போர்ப் பயிற்சியில் பங்கேற்ற அந்த கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்தது.

இலங்கை எம்பி கேள்வி
இதற்கிடையே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ஐரிஸ் டேனா என்ற ஈரான் போர்க்கப்பல் காலி துறைமுகத்தில் ( Galle Port) நுழைய அனுமதி கேட்டதாகவும் இருப்பினும் அரசு சுமார் 11 மணி நேரம் அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். இவ்வளவு நேரம் தாமதித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும், ஈரான் போர்க்கப்பலை ஏன் முன்கூட்டியே துறைமுகத்தில் அனுமதிக்கவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இலங்கையின் தெற்குக் கடலோரத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரான் போர்க்கப்பலைத் தாக்க அழித்த நிலையில், அதைத் தொடர்ந்தே இந்த கேள்விகள் எழுந்துள்ளன. ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க நடத்திய தாக்குதலில் பல ஈரான் மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த ஐரிஸ் டேனா, இந்தியத் துறைமுகத்திலிருந்து ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்கா சொல்வது என்ன
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பென்டகனும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதிய ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது என பென்டகனில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்தார். நொடிப்பொழுதில் ஈரான் போர்க்கப்பலைத் தாக்கி அழித்ததாக அவர் தெரிவித்தார்.
மீட்புப்படையினர் 87 சடலங்களைக் கொண்டுவந்ததாக இலங்கை மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். 32 மாலுமிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுமார் 180 பணியாளர்களில் 60 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னணி
இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட 'மிலன்' கடற்பயிற்சியில் இந்த ஈரான் கப்பலும் கலந்து கொண்டது. வங்காள விரிகுடாவில் நடந்த ஒத்திகையில் ஐரின்ஸ் டேனா (IRINS Dena) போர்க்கப்பல் பங்கேற்றது. அந்த போர்ப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது தான் ஐரின்ஸ் டேனா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ம் தேதி, இந்தியக் கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளை ட்விட்டர் தளத்தில் ஐரிஸ் டேனா விசாகப்பட்டினம் வந்ததை வரவேற்றுப் பதிவிட்டது. அந்த போர் ஒத்திகை முடிந்து திரும்பியபோது தான் அது தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கருத்துச் சொல்லவில்லை
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் சர்வதேச கடல் பரப்பில் இருந்த கப்பலைத் தாக்கி அழிப்பது எந்த விதத்தில் நியாயம் என ஈரான் சாடியுள்ளது. மேலும், இதற்கு மிக மோசமான பதிலடியும் வழங்குவோம் என ஈரான் கூறியுள்ளது. அதேநேரம் டேனா மூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக இதுவரை, இந்தியக் கடற்படை அல்லது மத்திய அரசு எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications