இந்தியாவை மிஞ்சும் வளம்.. டிரம்ப் பேச்சை ஜெலன்ஸ்கி மதிக்காததற்கு காரணம் இதுதான்!
கீவ்: போருக்காக செய்த உதவிக்கு பதிலாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களில் பாதியை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருந்தார். இதற்கான ஒப்பந்தத்தில் இப்போது வரை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடவில்லை.
காரணம் உக்ரைனிடம் இருக்கும் இயற்கை வளங்கள்தான். இந்தியாவை விட அதிகமாக இது இருக்கிறது. எனவே, உக்ரைன் யாரிடமும் அடிப்பணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆகவேதான் ஜெலன்ஸ்கி ஆட்டிட்யூட் காட்டுகிறார் என சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஜெலன்ஸ்கி வந்திருந்தார். ஏற்கெனவே பேசியபடி, உக்ரைனில் உள்ள கனிம வளத்தில் பாதியை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து இடுவதற்குதான் வந்திருந்தார். ஆனால், டிரம்ப்பும், துணை அதிபர் ஜே.டி வான்ஸும் சேர்ந்துக்கொண்டு ஜெலன்ஸ்கியை திட்டிவிட்டனர். இதனால் கடுப்பான ஜெலன்ஸ்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
ஜெலன்ஸ்கியின் இந்த செயல் இரண்டு விதமாக விமார்சிக்கப்பட்டது. டிரம்ப் என்ன பேசியிருந்தாலும் அவருடன் சமாதானமாக போயிருக்க வேண்டும். இத்தனை நாட்களாக அவர்தானே நமக்கு ஆயுத உதவிகளை செய்து வந்திருக்கிறார். அவரை பகைத்துக்கொண்டால் ஆயுதங்கள் எப்படி கிடைக்கும்? ரஷ்யாவுடன் எப்படி மல்லுக்கட்டுவது? என ஒரு சாரார் கேள்வி எழுப்பினர்.
மற்றொரு பிரிவினர், டிரம்ப் என்ன அவ்வளவு பெரிய ஆளா? அவர் இல்லையெனில் நம்மால் சமாளிக்க முடியாதா? டிரம்ப்புக்குதான் நாம் தேவை. நமக்கு டிரம்ப் தேவையில்ல்லை என்று பேச தொடங்கினர்.
இரண்டு கருத்திலும் உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது. கடந்த 2022ம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இன்று வரை சுமார் 48.5 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க உக்ரைனுக்கு அள்ளி கொடுத்திருக்கிறது. இது தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக போன்ற மாநிலங்களின் ஆண்டு வருமானத்திற்கு ஈடான தொகை. இவ்வளவு நிதி இருந்தால், இந்திய ராணுவத்தின் 8 மாத செலவுகளுக்கு போதுமானதாகும். எனவே முதல் தரப்பினர் சொன்ன விஷயம் சரிதான்.
அதேபோல உக்ரைனில் அரிய வகை கனிமங்கள் இருக்கின்றன. உலகில் கிடைக்கும் 50 அரிய வகை கனிமங்களில் 23 உக்ரைனில்தான் இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 15 டிரில்லியன் டாலர். அதாவது இந்தியாவின் GDP-ஐ விட 3 மடங்கு இது அதிகம். இவ்வளவு நிதியை வைத்து இந்தியாவுக்கு 26 ஆண்டுகளுக்கு தேவையான பட்ஜெட்டை போட முடியும். 200 ஆண்டுகளுக்கு ராணுவ தேவையை சமாளிக்க முடியும். சுருக்கமாக சொல்வதெனில் சீனாவின் பொருளாதாரத்திற்கு சமமான தொகை இது.
அப்படி என்னதான் இருக்கிறது உக்ரைனில் என்று கேட்கிறீர்களா? பெரிலியம், லித்தியம், லித்தியம், கிராஃபைட், டைட்டானியம்மெக்னீசியம், இரும்பு, யுரேனியம் மற்றும் டைட்டானியம் ஆகியவை அதிக அளவில் இங்கு இருக்கிறது. உலகின் கிராஃபைட் இருப்புக்களில் 4 சதவீதத்தை உக்ரைன் கொண்டுள்ளது. மெக்னீசியம் இருப்புக்களில் 1.6 சதவீதத்தையும், இரும்பு இருப்புக்களில் 1.5 சதவீதத்தையும், யுரேனியம் இருப்புக்களில் 2 சதவீதத்தையும், டைட்டானியம் இருப்புக்களில் 7 சதவீதத்தையும் உக்ரைன் வைத்திருக்கிறது.
இவ்வளவு வைத்துக்கொண்டு எதற்காக அமெரிக்காவிடம் கையேந்த வேண்டும்? என இரண்டாவது தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். எனவேதான் ஜெலன்ஸ்கி, டிரம்புக்கு பிடி கொடுக்காமல் முறுக்கிக்கொண்டு இருக்கிறார். மட்டுமல்லாது பிரிட்டன் தலைமையில் சில ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவியை செய்ய முன் வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications