"சிங்க பெண்ணே.." உலக நாடுகளை வழிநடத்தும் பெண் தலைவர்கள்! சர்வதேச அரங்கில் படைத்த சரித்திர சாதனை
மெக்சிகோ சிட்டி: இந்த காலத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். உலகின் பல முக்கிய நாடுகளைக் கூட வழிநடத்தி வருகிறார்கள். வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தற்போது எந்த உலக நாடுகளை வழிநடத்தும் பெண் தலைவர்கள் யார்! அவர்கள் சாதித்தது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மகளிர் தினம் வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இத்தனை காலம் உரிமைகளும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது தான் ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

இதைச் சரியாகப் பயன்படுத்தி பெண்கள் பல்வேறு துறைகளில் மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு நாடுகளில் மக்களை எதிர்கொண்டு தேர்தலில் வென்று நாட்டையே வழிநடத்தும் பவர்புல் பொறுப்புகளிலும் உள்ளனர். அப்படி உலக நாடுகளை வழிநடத்தும் பெண் தலைவர்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
இத்தாலி பிரதமர்
இத்தாலியின் பிரதமராக இருக்கும் பெண் தலைவர் ஜியோர்ஜியா மெலோனி. இத்தாலி பிரதர்ஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 2022 அக்டோபர் முதல் இத்தாலி பிரதமராக இருக்கிறார். இத்தாலி நாட்டில் பிரதமர் பதவிக்கு வந்த முதல் பெண் மெலோனி ஆவார். கடந்த 2006 முதல் முறையாக இத்தாலி நாடாளுமன்றத்திற்குத் தேர்வான மெலோனி, அதன் பிறகு பல்வேறு அரசு பதவிகளில் இருந்துள்ளார். படிப்படியாக முன்னேறி இப்போது இத்தாலி பிரதமராக உருவெடுத்துள்ளார். தனது பழமைவாத மற்றும் தேசியவாத கருத்துக்களுக்குப் பெயர் பெற்ற மெலோனி, சட்டவிரோத குடியேற்றம் & இத்தாலி பொருளாதார சீர்திருத்தம் எனப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மெக்சிகோ அதிபர்
அடுத்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் .. கடந்தாண்டு அக்டோபர் மாதம் மெக்சிகோ அதிபராகத் தேர்வான கிளாடியா, அந்நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவார். அதிபராகத் தேர்வாகும் முன்பு அவர் 2018 முதல் 2023 வரை மெக்சிகோ சிட்டி தலைவராக இருந்துள்ளார். அங்கு மிகச் சிறப்பாக அவர் பணியாற்றினார். இதன் காரணமாகவே அவரால் அதிபராகத் தேர்வாக முடிந்தது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிகிற்கு தடை விதிப்பது, மெட்ரோ விரிவாக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க தேவையான நடவடிக்கை எனப் பல முன்னெடுப்புகளை கிளாடியா எடுத்துள்ளார்.

டென்மார்க்
டென்மார்க் நாட்டின் பிரதமராக மெட்டே ஃபிரடெரிக்சன் உள்ளார். இவர் கடந்த 2019 ஜூன் மாதம் முதல் டென்மார்க் பிரதமராக இருக்கிறார். அந்நாட்டில் மிகவும் இளைய வயதில் பிரதமர் பதவிக்குத் தேர்வானவர் என்ற சாதனையும் இவர் வசமே இருக்கிறது. 2001 முதல் டென்மார்க் மக்கள் பிரதிநிதியாக உள்ள மெட்டே ஃபிரடெரிக்சன், பிரதமராகும் முன்பு நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்களாகவும் இருந்துள்ளார். பிரதமரான பிறகு காலநிலை மாற்றம், குடியேற்றச் சீர்திருத்தம் எனப் பல துறைகளில் இவர் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து நாட்டின் காட்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர்.. இவர் கடந்த 2017 முதல் ஐஸ்லாந்தின் பிரதமராக உள்ளார். அங்குள்ள லெப்ட்-க்ரீன் கட்சித் தலைவரான இயக்கத்தின் காட்ரின், 2007 முதல் அங்கு மக்கள் பிரதிநிதியாக உள்ளார். காலநிலை மாற்றம், பாலின மாற்றம், இயற்கை வளங்களைச் சரியாக நிர்வகிப்பது என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இவர் எடுத்துள்ளார்.

தாய்லாந்து
தாய்லாந்து பிரதமராக பியூ தாய் கட்சியின் பேடோங்டார்ன் ஷினவத்ரா இருக்கிறார். இவர் தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ராவின் மகள் ஆவார். தந்தை அடையாளத்தைத் தாண்டியும் அங்கு மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா, கடந்த 2023ஆம் ஆண்டில் தாய்லாந்து நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இவர் முக்கிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளார்.

உலக நாடுகள்
இதுபோல பல முக்கிய நாடுகளைப் பெண் தலைவர்கள் வழிநடத்தி வருகிறார்கள். மற்ற துறைகளைக் காட்டிலும் அரசியலில் பெண்கள் சாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், அதையும் தாண்டி இந்த பெண் தலைவர்கள் சாதித்து வருகிறார்கள். இது மட்டுமில்லை மேலும் பல நாடுகளில் கூட பெண்களே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.
உதாரணமாக மார்ஷல் தீவுகளின் அதிபராக ஹில்டா ஹெய்ன் இருக்கிறார். காலநிலை மாற்றம் & அணுசக்தி விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஹில்டா.. அதேபோல பார்படோஸின் பிரதமராக உள்ள மியா மோட்லி.. இவர் கரீபியன் பிராந்தியத்தில் ஒரு வலுவான தலைவராக அறியப்படுகிறார்.. தான்சானியாவின் அதிபராக சாமியா சுலுஹு ஹாசன் பதவியேற்றார். தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமோவாவின் பிரதமராக ஃபியாமே நவோமி மாதாஃபா இருக்கிறார். காலநிலை மாற்றம் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், பெருவின் அதிபர் டினா போலுவார்டே, லாட்வியாவின் பிரதமர் எவிகா சிலினா என உலகின் பல நாடுகளைப் பெண் தலைவர்களே வழிநடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications