உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்: 8,500 கார்களை ஏற்றலாம்
லண்டன்: கார், டிரக் ஏற்றிச் செல்லும் உலகின் மிகப்பெரிய கப்பல் சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை துவங்கி இங்கிலாந்தை அடைந்துள்ளது.
கார், டிரக் ஆகிய வாகனங்களை ஏற்றிச் செல்ல உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டப்பட்டது. சீனாவில் உள்ள ஜியாமென் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்ட அந்த கப்பலுக்கு கடந்த ஜூன் மாதம் நடந்த விழாவில் ஹோயேக் டார்கெட் என்று பெயர் வைக்கப்பட்டது.

200 மீட்டர் நீளமும், 36 மீட்டர் அகலமும் கொண்ட அந்த கப்பல் 75 யானைகளை தாங்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. அந்த கப்பலில் உள்ள வாகன நிறுத்துமிடம் மட்டும் 10 கால்பந்தாட்ட மைதானத்தின் அளவு ஆகும். டார்கெட் கப்பலில் 8 ஆயிரத்து 500 வாகனங்களை ஏற்றிச் செல்ல முடியும். அதில் உள்ள வாகனங்களை சாலையில் நிறுத்தினால் 26 மைல் தூரம் நிறுத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும்.
அத்தகைய பிரமாண்ட கப்பல் சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை துவங்கியது. சீனாவில் இருந்து ஐரோப்பா, இத்தாலி, ஹாலந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு இறுதியில் இங்கிலாந்திற்கு வந்துள்ளது.
14 அடுக்குகள் கொண்ட அந்த கப்பலில் 6.5 மீட்டர் உயரமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட டிரக்குகளை கூட சிரமம் இல்லாமல் ஏற்ற முடியும். டார்கெட் இங்கிலாந்தில் இருந்து கிளம்பி மீண்டும் சீனாவுக்கு செல்ல உள்ளது. செல்லும் வழியில் ஆப்பிரிக்கா மற்றும் ஓஷனியாவுக்கும் செல்கிறது.
ஹோயேக் ஆட்டோலைனர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த கப்பல் தான் உலகின் மிகப்பெரிய கார் மற்றும் டிரக் வாகனங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் ஆகும்.


Click it and Unblock the Notifications
