நிறுத்த மாட்டோம்.. கடுமையாக தாக்க போகிறோம்.. வெளிப்படையாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. அதிரும் காஸா!
ஜெருசலேம்: கடந்த வெள்ளிக்கிழமை ஜெருசலேமில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட மோதல் தற்போது காஸாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட மீண்டும் ஒரு முழு போராக வெடிக்கும் அளவிற்கு காஸாவில் மோதல் நடந்து வருகிறது.
Recommended Video
பாலஸ்தீனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக யூதர்கள் குடியேற தொடங்கிய காலத்தில் இருந்தே பல போர்கள் நடந்து இருக்கிறது. இதில் 1947 மற்றும் 1967 போர்கள் மிக முக்கியமானது. இதில் 1947 போரில்தான் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.
காசா, வெஸ்ட் பேங்க் தவிர மற்ற பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தியது. அதன்பின் 1967 போரில் வெஸ்ட் பேங்கின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தி, ஜெருசலேமிற்குள் புகுந்தது. தற்போது இங்கு மீண்டும் ஒரு போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போர்
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்துதான் இந்த மோதல் வேகம் எடுக்க தொடங்கியது. ஜெருசலேமில் இருக்கும் புனித தலமான அல் அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து அங்கு இருந்த இஸ்லாமியர்களை தாக்கியது. அந்த மசூதி இருக்கும் வழியாக இஸ்ரேல் "ஜெருசலேம் நாள் பேரணி" நடத்த இருந்தது. இதில் இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறி, அந்த மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்களை தாக்கியது.

இஸ்லாமியர்கள்
ஜெருசலேமின் ஓல்ட் சிட்டியை 1967 பிடித்ததன் நினைவாக இஸ்ரேல் இந்த பேரணியை அங்கு நடத்த திட்டமிட்டு இருந்தது. இது ரம்ஜான் மாதம் என்பதால் அங்கு இஸ்லாமியர்கள் தினமும் கூடி தொழுகை நடத்தி வந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் அல் அக்சா மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் இஸ்லாமியர்களை தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஸாவில் உள்ள பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாஸ் இஸ்ரேலை திருப்பி தாக்கியது.

ராக்கெட்
இஸ்ரேல் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவே ஹமாஸ் பதில் தாக்கியது.. மசூதியை உடனே காலி செய்யுங்கள், இல்லையென்றால் நடப்பதே வேறு என்று இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இஸ்ரேலோ, நடப்பது நடக்கட்டும் என்று காஸாவில் உள்ள ஹமாஸ் படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதுதான் தற்போது மிகப்பெரிய மோதலை உருவாக்கி உள்ளது.

மோதல்
காஸாவில் முதலில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 43-50 பேர் பலியானார்கள். அதன்பின் ஹமாஸ் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் இஸ்ரேலில் பலியானார். இந்த நிலையில் காஸாவில் இஸ்ரேல் மிக கடுமையான ராக்கெட் மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே காஸாவை சுற்றிவளைத்து, இஸ்ரேல் எல்லாம் பக்கமும் பிளாக் செய்து வைத்து இருக்கிறது.

திட்டம்
இதுவரை இரண்டு பக்கத்தில் இருந்து பல 100 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுவிட்டன. இந்த நிலையில் இந்த மோதலை பயன்படுத்திக்கொண்டு மொத்தமாக காஸாவை பிடிக்கும் முடிவில் இஸ்ரேல் இருக்கிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மொத்தமாக ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் முடிவில் இஸ்ரேல் இருக்கிறது. முன்பு ஹமாஸின் போர் தளங்களில் மீது மட்டுமே தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது உளவாளிகளை வைத்து, ஹமாஸ் போராட்ட குழு தலைவர்கள் இருக்கும் இடங்களை தெரிந்து கொண்டு சரியாக அங்கு தாக்குதல் நடத்துகிறது.

உறுதி
ஹமாஸின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உண்மையான பலி எண்ணிக்கை 100ஐ தாண்டலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, காஸா மீது எங்களின் தாக்குதல் தொடரும். ஹமாஸ் இயக்கத்தை குறி வைத்து தாக்குவோம். எங்கள் தாக்குதலின் பலத்தை நாங்கள் அதிகரிப்போம்.

தீவிர தாக்குதல்
இன்னும் தீவிரமாக நாங்கள் தாக்குதல் நடத்துவோம். ஹமாஸ் எதிர்பார்க்காத இடத்தில் தாக்குவோம். நீண்ட கால் தீர்வு ஏற்படும் வகையில் எங்கள் தாக்குதல் இருக்கும். ஏற்கனவே சில ஹமாஸ் கமாண்டர்கள் இறந்துவிட்டனர். மீதம் உள்ளவர்களையும் குறி வைப்போம். இந்த முறை எங்கள் தாக்குதல்கள் மிக கடுமையாக, தீவிரமாக இருக்கும்.. நீங்கள் பிரச்சனை செய்தால்.. நாங்களும் பிரச்சனை செய்வோம், என்று நெதன்யாகு கூறியுள்ளார். இதனால் இந்த மோதல் சிறிய முழு அளவிலான போருக்கு வழி வகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications