தீபாவளிக்கு டிரஸ் எடுக்க பணம் வருது! வாங்கிக்கோங்க! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா கலகலப்பு
மதுராந்தகம்: தீபாவளி பண்டிகை வருது, திமுக ஒரு ஓட்டுக்கு ரூ 5 ஆயிரத்துடன் வருவாங்க, டிரஸ் எடுக்க பணத்தை வாங்கிட்டு, விசில் சின்னத்திற்கு ஓட்டை போட்டுவிடுங்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேலும் திமுக சார்பில் பரந்தாமனும் அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும், நாதக சார்பில் ஜானகி ராமன் என 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இதில் மரகதம் குமரவேல் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அவர் தேர்தல் நடந்த 3 மாதங்களில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். அவர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
3 மாதங்களில் இடைத்தேர்தல் என்பதால் மரகதம் குமரவேலுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், திமுக- அதிமுக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பேசினார்கள், காசு கொடுத்ததால்தான் ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்தாரா? கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததா? இல்லையா? திமுக ஊழல் செய்யவில்லை என கம்யூனிஸ்ட் தோழர்களால் சொல்ல முடியுமா?
எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுகவினர் தவெகவுக்கு வாக்களித்தனர். வெறும் இன்ஸ்டாகிராம் வைத்து உங்கள முடிச்சிட்டோம். ஊழல் சுத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த காலத்தில் நடந்திருக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும். கடந்த தேர்தலில் ரூ 5 ஆயிரம் வாங்கினீர்களோ, அது போல் இந்த முறையும் ரூ 5 ஆயிரத்துடன் திமுகவினர் வருவாங்க. அதை வாங்கிக் கொண்டு தீபாவளிக்கு டிரஸ் எடுத்துக்கோங்க.
போன முறை மாதிரி இந்த முறையும் விசில் சின்னத்திற்கு போட்டு விடுங்கள். கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும் விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.
திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை விஜய்க்கு மட்டும்தான் இருக்கிறது. இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது. எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டு அவர்களுக்கு 15 அமைச்சர் பதவிகளை கொடுத்து முதல்வராகியிருக்க முடியும்.
எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார், எல்லாம் சமூகநீதியில் அவர் உறுதியாக இருந்தார். ஒரு அமைச்சராக பேசுவதைவிட ஒரு தவெக தொண்டனாகப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. நான் சட்டசபையில் பேசினாலே புரோட்டோகால், புரோட்டோகால் என சொல்லி பேச விடமாட்டேன் என்கிறார்கள். அது என்னவோ தெரியவில்லை. நான் எவுந்து நின்றாலே பேச விடமாட்டேங்கிறாங்க, அடுத்த முறை மூச்சுக் கூட விட முடியாது போல, மூச்சுவிட்டா கூட கத்த ஆரம்பிச்சிடுவாங்க. இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் , தாராபுரம் மட்டுமில்லாமல் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தொகுதிகள் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications
