Samsung strike: கோரிக்கைகள் நிறைவேறியது! இன்று முதல் பணிக்கு திரும்பும் சாம்சங் ஊழியர்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் ஊழியர்களின் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு பணிபுரியும் ஒரு பிரிவினர் சிஐடியூ தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து அக். 21 முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 25 இல் சாம்சங் இந்திய தொழிலாளர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்டதாக தொழிலாளர் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் போட்டி கடிதத்துடன் சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாம்சங் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஊழியர்கள் 23 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள், வேலை கேட்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிஐடியூ தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுப்பது, 23 பேருக்கு மீண்டும் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை சாம்சங் நிர்வாகம் ஏற்றுக் கொண்ட நிலையில் ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications