TN Assembly Election: தமிழக சட்டசபை தேர்தல்.. 6 மணி நிலவரப்படி 84.29% பதிவு.. 4.86 கோடி பேர் வாக்களித்தனர்
சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி, வாக்கு சதவீதம் 84.29% ஆக பதிவாகியுள்ளது. மொத்தம் உள்ள 5.73 கோடி பேர்களில் 4.86 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதலே விறுவிறுப்புடன் தொடங்கியது. இளைஞர்கள், பெண்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கினை பதிவு செய்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மாலை 6 மணி நேர நிலவரம்
குறிப்பாக நடிகர் அஜித் குமார் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே, காலை 6.40 மணிக்கே வருகை தந்து 6.55 மணியளவில் தனது வாக்கினை செலுத்தினார். இதேபோல் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் காலையிலேயே தங்களது வாக்கினை செலுத்தினர். தொடர்ந்து விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
எனினும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நின்றதால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29 சதவீதம் பதிவாகி உள்ளது. மொத்தம் உள்ள 5.73 கோடி பேர்களில் 4.86 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
மாலை 5 மணி நேர நிலவரம்
மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 82.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதாவது மொத்தம் உள்ள 5.73 கோடி பேரில் 4 கோடியே 71 லட்சம் பேர் வாக்களித்து இருந்தனர். இது வாக்குப்பதிவில் புதிய சாதனையாக மாறியது. இதற்கு முன்பு 2011 சட்டசபை தேர்தலில் 78.01 சதவீத ஓட்டு பதிவானதே அதிகமாக இருந்த நிலையில் தற்போது 5 மணி நேர நிலவரத்திலேயே இது முறியடிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறியில் 83 சதவீத வாக்குகள் பதிவாகியது. அம்பாசமுத்திரம் தொகுதியில் 80.40 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 76.12 சதவீத வாக்குகளும், நெல்லையில் 75.42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. பாளையங்கோட்டையில் 65.42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
மாலை 3 மணி நேர நிலவரம்
பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இதே 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக கரூர் மற்றும் நாகையில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நாமக்கல்லில் 76.43 சதவீதமும், பெரம்பலூரில் 70.54 சதவீதமும், புதுக்கோட்டையில் 69.85 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.
மதியம் 1 மணி நேரம் நிலவரம்
மதியம் 1 மணி நிலவரப்படி, 56.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் மதியம் 1 மணிக்குள் 3.25 கோடி பேர் வாக்களித்து இருந்தனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் (2021 சட்டசபை தேர்தல்) 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
மதியம் 1 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக திருப்பூரில் 62.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
11 மணி நேர நிலவரம்
காலை 11 மணி நேர நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவானது. அதாவது மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான 4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்தனர். அதாவது 2 கோடியே 15 லட்சத்து 38 ஆயிரம் பேர் வாக்களித்தனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் 26.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45 % வாக்குகள் பதிவாகி இருந்தது. நாமக்கல்லில் 41.41% வாக்குகளும், ஈரோட்டில் 41 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகி இருந்தது.
காலை 9 மணி நேர நிலவரம்:
காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. காலை 7 மணி முதல் 9 மணி மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 20.38 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், காலை 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரத்திற்குள் 1 கோடி பேர் வாக்களித்து இருந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்பிறகு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என மும்முரமாக அரசியல் பணிகளை செய்து வந்தனர். நேற்று முன் தினத்தோடு பிரசாரம் முடிந்தது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதாவது காலை 6.00 மணியளவில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் மூன்று அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் குறிப்பிட்ட சின்னத்தில் எதிரே உள்ள பட்டனை அழுத்தி அதே சின்னத்திற்கு வாக்கு விழுகிறதா என்று சோதித்து பார்த்தனர். இப்படி 50 ஓட்டுகள் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு
பின்னர் அவை எண்ணி பார்க்கப்பட்டு வாக்குகள் சரியான கணக்கில் வருகிறதா என சோதிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது. பின்னர் மாதிரி வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வாக்குகளும் இல்லை என்பதை முகவர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்களும் காலையிலேயே வந்து ஜனநாயக கடமையாற்றினர். காலையிலேயே வந்துவிட்டால் வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என பலரும் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். மதிய நேர உச்சி வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்து இருந்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், சில வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்கினை செலுத்த கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வாக்களித்து முடித்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அமைதியாக நடந்து முடிந்தது
முன்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னையில் இருந்தே கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தது.
வாக்காளர்கள் தங்கள் வாக்களித்த விவரங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்து இருந்தது. வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. செல்போன்களை வாங்கி வைக்க, வாக்குச்சாவடிக்கு வெளியே பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தமிழகத்தில் 5,949 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருந்ததாகவும், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன்படி எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை எப்போது?
இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் இருந்தனர். யார் வெற்றி பெறுவார்கள் என்பது, வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.















Click it and Unblock the Notifications