காஞ்சிபுரம் அருகே பயங்கரம்.. கானா பாட்டு போடுவதில் தகராறு.. 2 பேர் வெட்டிக் கொலை.. என்ன நடந்தது?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நெடுமல்லி பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கானா பாடல் போடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இரண்டு இளைஞர்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பு கொடுக்காததால்தான் இந்த கொலை நடந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் நெடுமல்லி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று கோவிலில் சுவாமி ஊர்வலம் நடந்தது. அப்போது ஒலிபெருக்கியில் கானா பாடல் போட வேண்டும் என ஒரு தரப்பினருக்கும், போடக்கூடாது என ஒரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் பெரிய அளவில் ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பானது. இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், போதையில் இருந்ததாக கூறப்படும் மர்ம நபர்கள் சந்துரு மற்றும் நீலகண்டனை பாட்டிலால் அடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகி உள்ளனர். உடனே அங்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்கள் நீங்கள் பாதுகாப்பு கொடுக்காததால் தான் இந்த கொலை நடந்துள்ளது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை பிடிக்க திவீர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
