தவெகவினர் எல்லாம் தற்குறிகளா? விஜய் கொடுத்த பதில்.. உற்று பார்த்த தொண்டர்கள்
சென்னை: தவெகவுக்கு ஆதரவு தருவோரை இணையத்தில் தற்குறிகள் என நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜய் பேசியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய விஜய், தனது கட்சியினர் மீதும் ஆதரவாளர்களின் மீதும் முன்வைக்கப்படும் இந்த விமர்சனம் தொடர்பாகப் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக ஏற்கனவே அந்த கல்லூரியில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பிற்கு அதிகளவில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

விஜய்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய விஜய், ஆளும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தவெகவினர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் அவர் பதிலளித்தார்.
தற்குறி விமர்சனம்
அதாவது இணையத்தில் தவெகவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைத் தற்குறிகள் என நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள். அது குறித்து விஜய் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில், "அதென்னப்பா அது.. தற்குறியா.!" எனச் சொல்லி ஒரு கேப் விட்டார். அங்குக் கூடியிருந்தவர்கள் விடாமல் கத்தினர். சில நொடிகள் கேப் விட்டு பிறகு தொடர்ந்து பேசிய விஜய், "நமது தவெக கட்சிக்கு ஆதரவு தரும் பல லட்சம் தொண்டர்கள், மக்கள், நண்பா- நண்பிகள், Gen Z தலைமுறையினரைத் தற்குறிகள் எனச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். இப்போது அவர்களே மாற்றிப் பேசுகிறார்கள்.
தற்குறி vs சங்கிகள்
அவர்கள் தற்குறி எல்லாம் இல்லை.. அப்படி எல்லாம் கூப்பிடாதீர்கள். அவர்கள் சங்கிகள் எல்லாம் இல்லை.. எனவே அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று ஒரு குரல் வந்துள்ளது. யாருடா அந்த குரல் எனப் பார்த்தால் ஒரு ஆச்சரியம். சமீபத்தில் அறிவு திருவிழா.. இல்லை சாரி அவதூறு திருவிழா என ஒன்று நடத்தினார்களே.. அதில் அவர்கள் தலைமையின் அறிவு கண்ணைத் திறந்து வைக்கும்படி ஒருவர் பேசியுள்ளார். அவர்கள் எம்எல்ஏ ஒருவரே அப்படிப் பேசியுள்ளார். அவர் யார் எனப் பார்த்தால் நமது கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாளின் உறவினர்.
என்னடா இது தவெகவுக்கு ஆதரவாக நமது கட்சியில் இருந்தே ஒரு குரல் வருகிறதே என ஒரு குழப்பம்.. அந்த குழப்பம் இதோடு நிற்காது. அந்த ஆதரவு குரல் எல்லா இடங்களிலும் எல்லா வீடுகளிலும் எதிரொலிக்கும். சும்மா பிளாஸ்ட் பிளாஸ்ட் தான்.
அரசியல் எதிரி யார்?
மறுபடியும் சொல்கிறேன் நான் அரசியலுக்கு வந்தது.. உங்களுக்கு நல்லது செய்வதற்கு மட்டும் தான்.. நமக்கு கொள்கை எதிரி யார்.. அரசியல் எதிரி யார் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டுத் தான் களத்திற்கு வந்திருக்கிறோம்.. அதில் எந்த விதமான குழப்பமும் ஊசலாட்டமும் எதுவும் இருக்கப் போவதில்லை.. இந்த விஜய் சும்மா எதுவும் சொல்ல மாட்டான்.. சொன்னால் அதைச் செய்யாமல் விடமாட்டான்..
நமக்கு அரசியல் புரிதல் இல்லை அது இல்லை இது இல்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.. நான் கேட்கிறேன்.. மக்கள் எல்லாம் தற்குறிகளா? அதே மக்களின் வாக்குகளை வாங்கும் நாங்கள் தற்குறிகள் என்றால்.. அதே மக்களின் வாக்குகளைத் தானே நீங்கள் இத்தனை காலம் வாங்கிக் கொண்டு இருந்தீர்கள். அப்போ நீங்க யார்? உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதையும் நன்றியும் இதுதானா..
ஆச்சரியக்குறி
ஒன்றை மட்டும் சொல்கிறேன். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தற்குறி தற்குறினு சொல்கிறீர்களே.. இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தான் உங்கள் அரசியலைக் கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்கள் யாரும் தற்குறிகள் இல்லை. தமிழக அரசியலை மாற்றப் போகும் ஆச்சரியக்குறிகள்.. தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றத்திற்கான அறிகுறிகள்" என்றார்.












Click it and Unblock the Notifications