உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராவது எப்போது? திமுகவுக்கு குட் நியூஸை அடித்துச் சொன்ன அமைச்சர்
காஞ்சிபுரம்: 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்னர் துணை முதல்வர் பதவி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது போல் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பவள விழா பொதுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பொதுக் கூட்டம் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த பவள விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூட, அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது துணை முதல்வர் பதவி குறித்து திமுகவில் பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஏன் 10 நாள், நாளை கூட அறிவிப்பு வரலாம். இன்னும் ஓரிரு நாட்களில் கூட இந்த அறிவிப்பு வரும் என தெரிவித்திருந்தார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

உதயநிதி எம்எல்ஏவானதும் அவர் எப்போது அமைச்சராவார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் ஸ்டாலின் துணை முதல்வரானார். அது போல் ஸ்டாலின் முதல்வராக இருக்கும் தற்போது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கைள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்பு அமைச்சரவையில் மாற்றமா என ஸ்டாலினிடம் கேட்டபோது கூட, அவர் கிண்டலாக நீங்கள்தான் சொல்கிறீர்கள், எனக்கு தெரியவில்லை என்றார். அது போல் சென்னை கோட்டூபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, எனக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் உரிய முடிவு எடுப்பார் என தெரிவித்து விட்டார்.












Click it and Unblock the Notifications