மீண்டும் மீண்டும்.. வடகலை - தென்கலை அர்ச்சகர் மோதல்! களேபரமான காஞ்சி கோயில்! முகம் சுளித்த பக்தர்கள்
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயில் அருகே தேசிகர் சுவாமி முன் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வெடித்த தகராறு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே தமிழ்நாட்டில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இந்த மோதல் சம்பவங்கள் அதிகம். இரு தரப்பினருக்கும் இடையே வழிபாடுகள், சடங்குகள் செய்வதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த ஜூன் மாதமும் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

அப்போது கோயிலில் வைகாசி பிரமோற்சவத்துக்கான கொடியேற்றம் தொடங்கி 3 ஆம் நாள் காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அனுமந்த வாகன உற்சவம் இரவு நடந்தது. அப்போது கோயிலில் இருந்து வடகலை பிரிவினர் வேத பாராயணங்கள் முழங்கியபடி சங்கரமடம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மண்டகப்படியாக கண்டருளி பட்டாச்சாரியார்களின் வேத பாராயணங்கள் பாடப்பட்டன.
இந்த நிலையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே வேத பாராயணம் பாடுவதில் உரசல் ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நித்தியபடி பூஜைகள் நடந்தன. அப்போது சாமிக்கு நெய்வேத்திய நித்தியபடி செய்த பிரசாதம் வழங்கும்போது வடகலை பிரிவினர் வேத பிராயணம் பாடிக்கொண்டு வந்தனர். அப்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றும் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மோதல் ஏற்பட்டது. சுவாமி உலாவின் போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடி வந்துகொண்டு இருந்ததாகவும், அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு வந்து அர்ச்சகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினரும் பிரபந்தம் பாட அனுமதி அளித்த பிறகு போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி உலா நடைபெற்றது. அர்ச்சகர்களின் மோதல் காரணமாக பக்தர்கள் முகம் சுளித்தபடி சென்றனர். அவ்வப்போது ஏற்படும் இந்த மோதலால் அமைதியாக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வடகலை அர்ச்சகர்கள் மற்றும் தென்கலை அர்ச்சகர்கள் இடையிலான மோதலால் அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications