118 சவரன்.. யூடியூபர் மதுமிதா பின்னாடியே போன கொள்ளையன்.. மொட்டை போட்டு.. சிக்கியது இப்படித்தான்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி யூடியூபர் மதுமிதா வீட்டில் நடந்த ரூ.1 கோடி மதிப்பிலான கொள்ளையடித்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.. போலீசாரிடம் சிக்கிய முக்கிய குற்றவாளி இசக்கிபாண்டி, பகீர் வாக்குமூலம் ஒன்றை தந்துள்ளார்.. இந்த கொள்ளையில் மேலும் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளதால், அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் ஜி.பி. கார்டன் பகுதியில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதா, கடந்த 24-ம் தேதி தனது கணவர் வினோத்துகுமார் மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார்.

கன்னியாகுமரி மதுமிதா
குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவு பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பிறகு பெட்ரூமிலிருந்த பீரோவை உடைத்து, சுமார் 118 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வீட்டுக்கு திரும்பிய மதுமிதா குடும்பத்தினர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ராஜாக்கமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்... இதையடுத்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் இறங்கினர்.
கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன. இதை வைத்து அவர்கள் சென்ற பாதைகளில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
மதுமிதா கிட்ட அட்ரஸ் கேட்ட கொள்ளையன்
இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவருடன் தொடர்புடைய மேலும் 2 பேரையும் கைது செய்து ராஜாக்கமங்கலம் ஸ்டேஷனில் வைத்து விசாரணையும் மேற்கொண்டனர்..
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இசக்கிபாண்டி சில தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்... அப்போது, "மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் அதிகளவில் பணம், நகைகளை காண்பித்து வீடியோ போஸ்ட் செய்திருந்தார். அதனால் மதுமிதா வீட்டில் நிறைய நகை, பணம் இருக்கும் என்று தெரிந்தது. அங்கு சென்றால் அதிகளவு நகைகளை கொள்ளையடிக்கலாம் என திட்டமிட்டோம். அதற்கு பிறகுதான், மதுமிதா வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்க வந்தோம்" என்று தெரிவித்தள்ளார்.
எப்படி கொள்ளை நடந்தது
இதனிடையே, இந்த கொள்ளை எப்படி திட்டமிடப்பட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. மதுமிதா வெளியிட்ட ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்த இசக்கிபாண்டி, எப்படியாவது கொள்ளையடித்து விட வேண்டும் என்பதால், அவரது வீடு எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதற்காக மதுமிதாவிடமே மெசேஜ் மூலம் வீட்டு அட்ரஸ் கேட்டுள்ளார்.. ஆனால், அந்த மெசேஜை மதுமிதா கண்டுகொள்ளவேயில்லையாம்.
மொட்டை போட்ட கொள்ளையன்
அதற்குபிறகு மதுமிதா தன்னுடைய குழந்தை படிக்கும் பள்ளி குறித்து ஒரு வீடியோவில் சொல்லியிருந்தார்.. உடனே அந்த பள்ளியின் பெயரை குறித்து வைத்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஃபாலோ செய்துள்ளார்.. குழந்தையுடன் பள்ளிக்கு வந்து செல்லும் மதுமிதா பின்னாடியே சென்று அவரது வீட்டையும் கண்டுபிடித்துள்ளார்.. பிறகு மதுமிதா எப்போது வீட்டை விட்டு வெளியே செல்கிறார் என்பதையும் நோட்டம் போட்டுகொண்டேயிருந்தாராம்..
அதற்கு பிறகுதான், மதுமிதா வீட்டில் இல்லாத நேரம், கொள்ளையடிக்க முடிவு செய்தார்.. ஹெல்மெட், முகத்துக்கு மாஸ்க் அணிந்து, டெலிவரி பையுடன், நண்பருடன் பைக்கில் கிளம்பி சென்றுள்ளார் இசக்கிபாண்டி.. திருட்டு நகைகளில் பங்கு தருவதாக சொல்லி, அந்த நண்பரை கொள்ளைக்கு அழைத்து சென்றுள்ளார்.. ஆனால், போலீசில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கொள்ளையடித்ததுமே, தலையில் மொட்டை போட்டுக் கொண்டாராம்.
சபாஷ் போலீஸ்
இந்த கொள்ளை சம்பவம் கடந்த நான்கைந்து நாட்களாகவே பரபரப்பாக பேசப்படுகிறது.. மதுமிதா தன்னுடைய நகைகள் கொள்ளை போனதாக பொய் சொல்கிறாரோ? வருமான வரியிலிருந்து தப்புவதற்காக இப்படியொரு நாடகம் நடத்துகிறாரோ? என்றுகூட சிலர் சந்தேகம் கிளப்பினார்கள்..
ஆனால், கொள்ளை நடந்த நேரத்தில் மதுமிதா வீட்டு பகுதியில் செயல்பட்ட செல்போன்கள், 500 சிசிடிவி கேமராக்களை கொண்டு, கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர் நம்முடைய போலீசார்...!!!




Click it and Unblock the Notifications
