கன்னியாகுமரி ரயிலுக்கு முட்டையால் வந்த சோதனை.. நடு வழியில் அல்லோலப்பட்ட பயணிகள்! காரணத்தை பாருங்க
சென்னை: கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரயிலில் முட்டைக்காக ஊழியர்கள் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் அபாய சங்கிலியை பிடித்து பயணிகள் ரயிலை நிறுத்தியதால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
ரயில்களில் பயணிகளுக்கு ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நடு வழியில் ரயிலை நிறுத்துவதை பார்த்து இருக்க முடியும். பயணிக்கு உடல் நலக்குறைவு அல்லது ஏதேனும் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்கள் என ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் அவசர தேவைக்காக ரயிலை நிறுத்த ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஒரு சிவப்பு நிற எமர்ஜென்சி சங்கிலி இருக்கும். அதை பிடித்து இழுத்தால் அடுத்த சில நிமிடங்களில் ரயில் நின்று விடும்.

நடு வழியில் நின்ற ரயில்
ரயில்வே போலீசாரும், ஊழியர்களும் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு என்ன ஆனது என்று வந்து விசாரித்து பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். ரயில்களில் இருக்கும் பொதுவான நடைமுறையாக இருந்தாலும் இதை சில நேரம் சின்ன பிரச்சினைகளுக்கு கூட சிலர் இழுத்து பயணிகள் நேரத்தை வீணடித்து விடுவார்கள். இன்னும் சிலரோ தெரியாமலே கூட அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விடுவார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்புகூட ஓடும் ரயிலில் எமெர்ஜென்சி சங்கிலியில் பேக்கை வட மாநில இளைஞர் கட்டி தொங்க விட்டதால் ரயில் நடு வழியில் நின்றது. இப்படியான சில சுவாரசிய நிகழ்வுகள் அவ்வப்போது ரயில்களில் நடைபெறும். அந்த வகையில், தான் கோழி முட்டை பிரச்சினைக்காக ரயில் நடு வழியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. நாகர்கோவிலில் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து இங்கே பார்க்கலாம்.
முட்டைக்காக ஊழியர்கள் இடையே தகராறு
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு நேற்று முன்தினம் மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. நாட்டிலேயே மிக நீண்ட தூரம் செல்லும் ரயிலாக அறியப்படும் இந்த ரயிலில் வட கிழக்கு மாநில பயணிகள் முதல் தென் மாநில பயணிகள் வரை பலரும் பயணிப்பதை பார்க்க முடியும். இந்த ரயில் நேற்று வழக்கம் போல சென்று கொண்டிருந்த போது, ரயிலில் உள்ள உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏசி பெட்டி ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே ரயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷனுக்கு வந்தடைந்தது. அப்போதும் ஊழியர்கள் இடையே தகராறு நிற்கவில்லை. நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ரயில் திடீரென நடுவழியில் நின்றது. இதனையடுத்து ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று ரயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கோண்டனர்.
அப்போது ஓடும் ரயிலில் தகராறில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவரவர்கள் பணிபுரியும் பிரிவை சேர்ந்த மேலும் ஊழியர்கள் வந்து மோதலில் ஈடுபட்டதனால் தான் அச்சமடைந்து பயணிகள் அபாய சங்கிலியை இழுத்ததாக கூறினர். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில், ஏசி பெட்டி ஊழியர்கள் பயணிகள் போலவே பணம் கட்டி தான் முட்டை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
30 நிமிடங்கள் தாமதமாக சென்றது
எனவே இவர்களுக்கும் உணவக ஊழியர்கள் முட்டை வழங்க வேண்டும். ஆனால் உணவக ஊழியர்கள் முட்டை வழங்கவில்லை. முட்டை வழங்குமாறு கேட்டதனால் தான் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உண்டானது என்று தெரியவந்தது. இதையடுத்து உணவக ஊழியர்கள் இரண்டு பேர், ஏசி பெட்டி ஊழியர்கள் இரண்டு பேர் என 4 பேரையும் போலீசார் கைது செய்து ரயிலில் இருந்து இறக்கினர். பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முட்டை வழங்காததால் ஊழியர்கள் இடையே ஏற்பட்ட சண்டையினால், அந்த ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications